
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.கவைச் சேர்ந்த அன்புமணி இராமதாசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நான்கு இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும்.
தேர்தல் அறிவிப்பு வெளியானது, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம்,கவிஞர் சல்மா ஆகியோரும் கூட்டணிக் கட்சியான மநீம சார்பில் நடிகர் கமல்ஹாசன் ஆகிய நால்வரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக முன்னணியினர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, ஒரு இடத்தை தேமுதிக கட்சிக்குக் கொடுத்து அக்கட்சியைக் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்கிற கருத்து பேசப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பும் ஒரு சாரார் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.அப்போது மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு குறித்தும் அது இல்லாமலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்த சாத்தியக் கூறுகள் பற்றியும் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இருவரும் பேசிய விசயங்களை தத்தமது கட்சியினருடன் பகிர்ந்து கொண்ட பிறகு அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


