
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.கவைச் சேர்ந்த அன்புமணி இராமதாசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நான்கு இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும்.
தேர்தல் அறிவிப்பு வெளியானது, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம்,கவிஞர் சல்மா ஆகியோரும் கூட்டணிக் கட்சியான மநீம சார்பில் நடிகர் கமல்ஹாசன் ஆகிய நால்வரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது.
நேற்று காலை சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக முன்னணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 பேர் பெயர்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, செம்மலை ஆகியோர் பெயர்கள் இருக்கின்றன.இரண்டு பேர் இருக்குமிடத்தில் மூன்று பேர் போட்டி நடக்கிறது.
இதுமட்டுமின்றி, மக்களவைத் தேர்தலின்போது மாநிலங்களவை குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் நம்பிக்கை முக்கியம் சொன்ன சொல் முக்கியம் என்று பொதுவெளியில் பேசி வருகிறார்.
இவற்றோடு சசிகலா,ஓபிஎஸ் தரப்பினரும் வேட்பாளர் தேர்வில் செல்வாக்கு செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது. அவற்றைச் சமாளிக்க வேண்டுமானால் தென்மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள சாதியினருக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியும் இருக்கிறது.
இந்தக் காரணங்களால் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி திணறி வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


