அன்புமணி செய்த கொடுமைகளைப் பட்டியலிட்டு கண்ணீர் விட்ட இராமதாசு – முழுவிவரம்

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கும் அவர் மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கடும் மோதல் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று (மே 29,2025) தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் இராமதாசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் கூறியதாவது…..

தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நானும் பார்த்தேன், நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன். ஏன் எனக்கு இந்த பதவி நீக்கம், அல்லது பதவி இறக்கம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசைதிருப்பும் முயற்சியாகும்.

தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் ஆதாயம் தேட முயற்சி எடுத்து இருக்கிறார். இருப்பினும் அதற்குண்டான விளக்கத்தையும், பதிலையும் அளிப்பது எனது கடமையாகும். இனிப்பை (சுவீட்ஸ்) தவிர்த்து கசப்பான வார்த்தைகளைக் கொண்ட மருந்தைத்தான் பதிலாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லப் போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை 35 வயதில் என்னுடைய சத்தியத்தையும் மீறி மத்திய கேபினட் அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன்.

என்ன தவறு செய்தேன்? என கேள்வி கேட்டு, என்னைக் குற்றவாளியாக மக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்களிடமும் அடையாளம் காட்டி அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார். மூச்சுவிடாமல் பொய் பேசுவார். நான் அதற்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை துவக்கி முதலில் அடித்துஆட ஆரம்பித்தது அவர் தான். ஏதோ நான் போகிற போக்கில் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. ஆதாரத்தோடு இன்று ஒளிவுமறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகிறேன்.

பாண்டி பொதுக்குழுவில் என்ன நடந்தது? நீங்களும் வந்திருந்தீர்கள், உலகமே பார்த்து அதிர்ந்தது. ஒட்டுமொத்த பொதுக்குழுக் கூட்டமும் ஊடகமான நீங்களும் சேர்ந்தே அதிர்ச்சிக்கு உள்ளானீர்கள். மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் எதையும் கடைபிடிக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார்? நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன், முகுந்தனை இளைஞரணி தலைவர் என்று.

வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க முகுந்தனை நியமனம் செய்தேன். சுவற்றில் வீசிய பந்து திரும்புவதுபோல் உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா? மேடை நாகரிகம் தெரியாமல் அனைவரின் முன்பும் கால்களை ஆட்டிக் கொண்டிருந்தது சரியான செயலா? மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா?

நான் பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன்.நீங்கள் அங்குவந்து என்னைப் பார்க்கலாம் என்பது சரியான செயலா? தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்தது சரியான செயலா? நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்தது யார்? அழகான ஆளுயரக் கண்ணாடி என்ற கட்சியை ஒரேநொடியில் உடைத்து நொறுக்கியது யார்? கட்சியை ஒரு நொடியில் உடைத்ததை உலகம் முழுவதும் உள்ள ஆன்றோர்களும், சான்றோர்களும், அரசியல் ஆளுமைகளும், எதிர்க்கட்சிகளும், ஊடக நண்பர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லையே என பெரிதும் வருந்தினார்கள்.

கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு நடத்தினேன், நடத்தி வந்தேன். அதற்கு ஒரு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார். கடந்த காலங்களில் நான் அடைந்த அவமானங்களும், அவலங்களும், ஏச்சுப்பேச்சு ஏளனம், எள்ளி நகையாடல்களும், ஈட்டி போன்ற இழி சொற்களையும் இந்த ஊமை ஜனங்களுக்காக நான் கடந்து விட்டேன். இன்று எதிர்பாராத வகையில் வளர்த்த கிடாவே மார்பில் வீறுகொண்டு இடித்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன்.

ஆனால் ஒன்று, இதையும் நான் வெற்றியோடு கடந்து செல்வேன். உங்கள் தாயை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள். கடவுள் என்று சொல்வீர்கள். பொங்கல் நேரத்தில் முகுந்தன் சமாச்சாரத்தை குடும்பத்துடன் அமர்ந்து பேசினோம். அப்போது சரஸ்வதி அம்மா, உன்னுடைய மகளுக்கு பதவி கொடுத்திருந்தால் அமைதியாக இருந்திருப்பியா, உனது 2 ஆவது மகளை போட்டிருந்தால் சம்மதம் தெரிவித்து இருப்பாயா? என்றார். உடனே அங்கிருந்த பாட்டிலை தூக்கி அம்மா மீது வீசி அடித்தார்.நல்லவேளை அது அவர் மீது படவில்லை, சுவற்றில் பட்டுவிட்டது. எதுக்காக சொல்கிறேன். இதெல்லாம் வெறும் சாம்பிள்.

அதேபோல் நிர்வாகக் குழுவில் ஒருத்தர் பேசினார். உடனே அவரை உட்கார வைத்தார். இதுவா நிர்வாகக் குழு. நீங்க இப்படிப் பேசுங்க என்று சொல்லிக் கொடுத்து பேசுவதற்காகவா நிர்வாகக் குழு. வெறேன்ன பேசப்போகிறார்கள். கட்சி வளர்ச்சியைப் பற்றித்தான் பேசுவோம். 19 பேரில் ஒருத்தரிடம் கூட நான் பேசவில்லை.

அப்பதான் நான் சொன்னேன், ‘உனக்கு தலைமைப் பண்பு கொஞ்சம்கூட இல்லை’ என்று. ஒரு தலைவர் என்ன செய்யணும். ஒவ்வொருவரும் தங்களது கருத்தைச் சொல்லுங்கள். நான் குறித்து வைத்துக் கொண்டு பதில் சொல்கிறேன் என்று அல்லவா கூறியிருக்க வேண்டும் என அன்புமணியிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால், ஒருத்தர் பேச ஆரம்பித்தார், அவரையும் கடித்துக் குதறிவிட்டார். இதுதான் நிர்வாகக் குழுவின் இலட்சணம்.

கட்சியின் வளர்ச்சிக்காக தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களுக்கு நான் போயிட்டு வரலாம் என்று போனேன். எனக்கு மனசும் ஒரு மாதிரியாக இருந்தது. எனக்குப் பிடித்த மாவட்டம் தர்மபுரி, சேலம். சேலத்தில்தான் எனக்கு தலைமை நிலைய ஆபீசை வாங்கிக் கொடுத்தார்கள். இதனால் அங்கு போகலாமே என ஆரம்பித்தேன்.

அதற்கு அங்கு மைக் வைத்து நான் பேசக்கூடாது, 200 பேருக்குமேல் கூடக் கூடாது. நானும் வருவேன். என்னைப் (இராமதாசை) பார்க்க விரும்புகிறவர்கள் நான் தங்கியிருக்கும் உணவு விடுதியில் தான் பார்க்க வேண்டும் என்று கட்டளை. யாருக்கு? இந்தக் கட்சியை ஆரம்பித்த நிறுவனருக்கு.திருமண மண்டபம் கூடாது, தங்கியிருக்கும் அறையில் இருந்து கொண்டு நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டும். இதெல்லாம் ஆர்டர். நிறுவனருக்கு போட்ட ஆர்டர்ஸ். இவை கட்சிக்குத் தடையாக உள்ளது.

நான் உங்களைக் கேட்கிறேன். யார் உழைத்து வளர்த்த கட்சி. யார், யாருக்குக் கட்டளை இடுவது. 95 ஆயிரம் கிராமங்களுக்குச் சோறு தண்ணீர் இல்லாமல் அத்தனை கிராமங்களுக்கு சென்று வந்த கால்கள் என் கால்கள். அப்போது பஸ் எல்லாம் கிடையாது. காடு மேடு, வரப்பு, இரவு நேரங்கள், ஒத்தையடிப் பாதை. அப்படி பாடுபட்டு நான் வளர்த்த கட்சி.

நேற்று (நேற்று முன்தினம்) சமூக ஊடகப் பேரவைக் கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு 6 பேரை அடிக்கிறதுக்கு வைத்திருக்கிறார்.அந்தக் கூட்டத்துக்கு வருபவர்களை 6 பேரை வைத்து அடிக்கப் போகிறார் என்று. 32 மாவட்டத்துக்கும் போய் அவர்களுடன் கூட உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அளவளாவி வந்த நான், இதுபோன்ற அடிதடிகளில் நான் போனதுகூட கிடையாது. இப்படிச் சொல்லி இருக்கிறார். இருப்பினும் 100 பேர் நேற்று வந்துவிட்டனர். இப்படி கூசாமல் பொய் வந்துவிழும். ஆனால் அன்புமணி பொய் பேசுவது கிடையாது என்கிறார்.

கட்சியின் நிர்வாகக் கூட்டத்தில் யாருடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும் அன்புமணி ஏற்பதில்லை. வெளிப்படுத்த வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை. நிர்வாகத்தில் 19 பேரில் ஒருவர் பேச ஆரம்பித்தால் கூட பேசக்கூடாது என்பார். ஆனால் நான் ஒவ்வொரு கூட்டத்திலும் என்னை விமர்சியுங்கள், தவறு இருந்தால் நான் திருத்திக் கொள்கிறேன் என்பேன். தயக்கம் இருந்தால் கடிதம் மூலமாவது எழுதுங்கள் என்றிருக்கிறேன். இப்படி எந்தத் தலைவரும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால், நான் சொன்னேன், தவறு இருந்தால் என்னைத் திருத்திக் கொள்கிறேன் என்று. அப்போது இந்த செல்போன் எல்லாம் கிடையாது. அப்படியெல்லாம் நான் இந்தக் கட்சியை வளர்த்தேன்.

அன்புமணியை தலைவராகவும், ஜி.கே.மணியை கவுரவ தலைவராகவும் போடப்பட்ட சம்பவத்தை நீங்கள் கேள்விப்பட்டீர்கள் என்றால், இப்ப நான் சொல்கிறேன், கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். நான் மகாபலிபுரத்தில் எனக்கு மனசு சரியில்லாத நிலையில் டான் ஓட்டலில் போய் தங்கியிருந்தேன். சரி 8 நாள் அங்கு தங்குவோம் என்று சென்றிருந்தேன். இதை யாரிடமும் நான் சொல்லவில்லை.

எப்படியோ தெரிந்து எனது மருமகள் அங்கு வந்தார். மாமா என்றார், என்னம்மா என்றேன்.அவர் வந்து என்னைச் சந்தித்தது புதன்கிழமை. அடுத்த புதன்கிழமை நாள் நன்றாக இருக்கிறது. மண்டபம் பார்த்துவிட்டேன், எல்லா ஏற்பாடுகளும் பண்ணி விட்டேன். தலைவரை மாற்ற வேண்டும் என்றார். வெறும் 8 நாளில் சாதாரணமாக ஒரு ப்யூன், வேலைக்காரருக்குக் கூட ஒருமாதம் வரை டைம் கொடுப்பார்கள். ஆனால் இவர் 8 நாளில் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டேன் என்றார். உடனே நான் அப்போதைய தலைவர் ஜிகே மணியை வரச்சொல்லி மருமகள் சொன்ன இவ்விசயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே தனது மைத்துனர், தம்பி உள்ளிட்டோரிடம் சொல்லி உள்ளார்.ஜிகே மணிக்கு ஜோசியம், கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் அவர்கள் இவரிடம் உங்களுக்கு ஒன்றரை மாதத்துக்கு கிரகம் சரியில்லை. அதன்பிறகு செய்யுங்கள் என்று கூறியதாக என்னிடம் வந்து சொன்னார்.

நானும் மருமகளை அழைத்து இதைச் சொன்னேன். அவரும் சரி மாமா என்றார். அதன்பிறகு ஒன்றரை மாதம் கழித்து அதே பட்டாபிஷேக தினம் வந்தது. நான் பட்டாபிஷேகத்தில் கட்டிப்பிடித்து இவரை அறிவித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். அப்போது நான் ஒரு செய்தியைச் சொன்னேன். எனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் எந்தக் கூட்டத்துக்கும் போக வேண்டாம் என்றேன். இது கட்சி, சங்கம் ஆரம்பிக்கும்போதே இருந்ததுதான்.

அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளைச் செய்து வந்தார். நிறைய உள்ளது, ஒன்றிரண்டு மட்டும்தான் சொல்கிறேன். தமிழ்க்குமரன் (திரைத்துறையில் இருப்பவர்), ஜி.கே.மணியின் பிள்ளை. அவருக்கு இருந்த சினிமா, உலக நட்புகளும், விளம்பரமும், பொருளாதாரமும் இயக்கத்துக்குப் பயன்பட்டு, இயக்கம் வளரும் என்ற எண்ணத்துக்குத் தடையாக நின்று நிராகரித்தார் அன்புமணி.

அவரை நியமனம் செய்து நான் கடிதம் கொடுக்கிறேன்.அவர் வாசல்படியைத் தாண்டவில்லை. அண்ணன் (அன்புமணி), உங்களைப் பார்த்து ஆசிபெற வேண்டும் என்று தமிழ்க்குமரன் கேட்க, கடிதத்தைக் கிழித்துப் போடச் சொல்லி அன்புமணி கூறினார். 2 மாதம் பிரச்னை, தொல்லை தாங்கவில்லை. சங்கமித்ராவில் ஒரு பொதுக்குழு நடந்தது. அந்த பொதுக் குழுவுக்காக அவரும், அவருடைய மனைவியும், குழந்தைகளும் புதுச்சேரி விடுதியிலேயே முதல்நாள் இரவே வந்து தங்கி விட்டனர்.நான் காலை 7 மணிக்கு எழுந்தவுடன் அன்புமணி எனக்கு போன் செய்து தமிழ்க்குமரன் அந்த பொதுக் குழுவுக்கு வரக்கூடாது என என்னிடம் கூறினார். இருந்தாலும் நான் அவர்களிடம் சொல்லவில்லை. அந்த குடும்பம் எவ்வாறு வருந்தி இருக்கும், கண்ணீர் சிந்தி இருக்கும். அவர் எவ்வளவு அவமானப்பட்டு இருப்பார். இதுதொடர்பான விமர்சனங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

அதன்பிறகு 2 மாதம் கழித்து ராஜினாமா செய்து விட்டார். அதே செயல்தான் முகுந்தனுக்கும் நடந்தது. முகுந்தனுக்கு மேடையிலேயே நடந்தது. இதேபோல், மாவீரன் குருவை கீழ்த்தரமாக நடத்திய விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இன்னும் இன்னும் பல. இதையெல்லாம் பார்த்த நான் நிர்வாகக் குழுவிலேயே நேருக்கு நேராக அன்புமணிக்கு தலைமைப் பண்பு அறவே இல்லை என்று சொன்னேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு நான் அதிமுகவுடன் நிலைப்பாடு ஏற்பட்டு அன்புமணியை அழைத்து இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி குறித்து முடிவு செய் என அறிவுறுத்தினேன். அதையும் அவர் கையிலேயே ஒப்படைத்தேன்.

ஆனால், அடுத்த நாள் என்னிடம் அன்புமணி மற்றும் சவுமியா ஆகியோர் வந்து என் கால்களைப் பிடித்துக் கொண்டு, ‘நான் பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவெடுத்து விட்டேன். இதனால் இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைந்தால்தான் எனது எதிர்காலம். மீறினால் நீங்கள் எனக்கு கொள்ளி வைக்க வேண்டியது இருக்கும்’ என்று கண்ணீர் மல்கக் கெஞ்சினர். இதற்காக குடும்பத்தினரும் கூறினர்.

இதனால் நான் எனது கட்சியின் அனைத்துக் கோட்பாடுகளையும் மீறி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். ஆனால் நான் அடுத்த நாள் காலையில் எழுந்து 7.30 மணியளவில் பல்துலக்கச் சென்றேன் கிளம்புவதற்குள் வெளியில் பாரத் மாத்தா கி ஜே என்ற கூக்குரல் கேட்டது. அப்போது தான் தெரிந்தது, அண்ணாமலை இங்கு வந்திருக்கிறார் என்று. அவருக்கு தடால்புடலாக விருந்துகளும் தயாரானது. இவை அனைத்துமே என்னுடைய கவனத்துக்கு வராமலேயே அன்புமணி தயார் செய்தது.

அனைத்து நாடகங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன்படியே பாஜகவுடன் கூட்டணி அமைந்தது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 3 தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெற்று இருப்போம். அதிமுகவுக்கு 6 தொகுதிகள் கிடைத்து இருக்கும். அதிமுக மற்றும் பாமக கூட்டணி தான் இயல்பானது. ஆனால், அனைத்தையும் அன்புமணி வீணாக்கினார்.

அன்புமணி பொய் கூசாமல் பேசுவார். அதில் ஒரு பொய்யை மட்டும் சொல்கிறேன். 108 பேர் மாவட்டச் செயலாளர்கள். அவர்கள் அனைவரிடமும் சொல்லி ஐயா போட்ட கூட்டத்துக்கு (மே 16 ஆம் தேதி) போகக் கூடாது என்று சொல்லி உள்ளார். அதில் 8 பேர் மட்டும்தான் வந்தார்கள். மற்ற 100 பேருக்கு இவரே போகாதீங்க… என்று சொல்லி உள்ளார். ஏன்? என்று கேட்டபோது என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஐயா எடுக்கப் போகிறார்கள் என்று கூறவே அவர்கள் நின்று விட்டனர்.8 பேர் மட்டுமே வந்தனர். அன்றே நான் செத்து போய்விட்டேன். அவர்கள் அனைவரையும் போட்டவரே நான்தான்.

எம்ஜிஆர் பாடல் வரியில் வருவதுபோல் மறுநாளே நான் செத்துப் பிழைத்து விட்டேன் என்று காட்டத்தான் நீச்சலடித்தேன். இது ஒரு பொய்.

அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்பது கற்பனைகூடச் செய்ய முடியாது. நீங்ககூட சொல்லுங்க. கற்பனை செய்யக் கூட முடியாது. இதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா? கட்சி ஏற்குமா, மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

என்னை நீக்க பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது என அன்புமணி சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு எப்போது வேண்டுமானாலும் பொதுக்குழு கூட்டி முடிவை தெரிந்து கொள்ளலாம் நான் பொதுக்குழுவை கூட்ட தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கம் செய்வேன்.

நிறுவனர் என்ற அதிகாரம் எனக்கு உள்ளது. மாநில செயற்குழு நிறுவனரால் அழைக்கப்பட்டு அவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டங்களை நடத்த வேண்டும் என கட்சி பைலாவில் உள்ளது.

எனக்கு 14 பஞ்சாயத்துக்கள் வைத்தார்கள். நான் பசுமைத் தாயகம், சமூக முன்னேற்ற சங்கம் என 34 துணை அமைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் வந்து எனக்கு பஞ்சாயத்து பண்ணினார்கள். ஏன் பஞ்சாயத்து முடியல்லன்னா, கடைசியில் கட்சியை ஐயா (இராமதாசு) பார்த்துக் கொள்ளட்டும்.நீங்கள் (அன்புமணி) வெளியில் மக்களைப் பாருங்கள் என்று 14 பஞ்சாயத்துக்காரரும் இதைத்தான் சொன்னார்கள். ஆனால் இவர் (அன்புமணி) என்ன எதிர்பார்த்தார் என்றால் கேட்டை சாத்திவிட்டு நான் யாரையும் பார்க்கக் கூடாது, உள்ளேயே இருக்க வேண்டும் என்று. இதுவரை நான் இதை சொல்லி இருப்பேனா? இதுதான் பஞ்சாயத்து என்றார்.

இதைச் சொல்லும்போது மருத்துவர் இராமதாசு கண்கலங்கினார்.

மருத்துவர் இராமதாசுவின் வெளிப்படையான இந்தக் குற்றச்சாட்டுகளால் பாமக தொண்டர்கள் பேரரதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Leave a Response