
தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது என்றார். இதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் சொல்லிவருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் நடந்த ‘தக் லைஃப்’ பட நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறிய விடை….
என்னையும், ‘தக் லைஃப்’ படத்தையும், மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழியைப் பற்றிப் பேசும் அளவிற்கு நான் உள்பட எந்தவொரு அரசியல்வாதிக்கும் போதிய கல்வி இல்லை. இதுபோன்ற ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்களிடம் விட்டுவிட வேண்டும்.
என் தரப்பில் இருந்து பார்க்கும்போது நான் கூறியது சரிதான், எதிர்த்தரப்பில் இருந்து பார்க்கும்போது அது தவறாக இருக்கலாம். இதில் மூன்றாவதாக ஒரு கோணம் இருக்கிறது. அவர்கள் தரப்பில் இருந்து பார்த்தால் இரு பக்கமும் சரி, வடக்கில் இருந்து வந்த ஒரு மொழியை சார்ந்து இருக்கப் போகிறீர்களா அல்லது குடும்பத்தின் பக்கம் இருக்கப் போகிறீர்களா என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என மொழி ஆய்வாளர்கள் சொல்வார்கள்.
கர்நாடகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். இது பதில் இல்லை, இது விளக்கம். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது…
கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மையிலும் உண்மை. சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாமே தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். உண்மையை உணராத கூட்டமாக, தன் வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி பேசி பலனில்லை.
1,800 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழில் இருந்து சமஸ்கிருதம் கலந்து கலந்து பேசியதால், பிளந்து வந்த முதல் மொழி கன்னடம்.அதன்பிறகு 1,600ல் தெலுங்கு வருகிறது. 15 ஆம் நூற்றாண்டில் தான் மலையாளம் வருகிறது. அதன்பிறகு துளு வந்தது. தமிழில் இருந்து பிரிந்து வந்த மொழிகள் தான் இவை. வரலாறு தெரிந்தால் அதை எதிர்க்க மாட்டார்கள். தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வறிஞர்களுக்கு கமல் சொன்னது சரி என்பது தெரியும். கமல் சொன்னது உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.


