
மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மக்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
அதோடு, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியையும், பிரதமர் மோடியின் 3 ஆவது கால பதவியின் முதல் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடும் வகையில் வீடு வீடாக பா.ஜ.க வினர் குங்குமம் விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது.
பிரதமரின் பேச்சுக்கும் பாஜகவின் செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.அவர் கூறியிருப்பதாவது…..
நான் உங்களுக்கு (பிரதமர்) சவால் விடுகிறேன். என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வாருங்கள். நீங்கள், உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கொண்டுவரலாம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சர்வதேச அளவில் தேசத்தின் நலன்களைப் பாதுகாக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு அரசியல் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் உலக அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வேளையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதோடு மட்டும் இல்லாமல், வருத்தமடையவும் செய்துள்ளது.
பிரதமர் முன்னிலையில் அவரது அமைச்சர் ஒருவர், ஆபரேஷன் சிந்தூர் போல, ஆபரேஷன் பெங்கால் நடத்துவோம் என்று கூறியுள்ளார். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால், நாளையே தேர்தலை நடத்துங்கள். உங்களின் சவாலை ஏற்க நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராக உள்ளோம். ஆனால், தயவுசெய்து காலம் ஒரு காரணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குழுவில் எங்களின் பிரதிநிதி அபிஷேக் பானர்ஜியும் ஓர் அங்கத்தினராக உள்ளார். தினந்தோறும் அவர் பயங்கவாதம், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அதேநேரத்தில் மோடியோ பிரதமராக இல்லாமல், பாஜக தலைவராக உங்களுக்கு முழுஆதரவு அளிக்கும் அரசை (மேற்கு வங்க அரசு) விமர்சிக்கிறீர்கள்.
நீங்கள் மேற்குவங்க அரசைக் குற்றம்சாட்டுகிறீர்கள், எதிர்க்கட்சிகளைக் குறைகூற விரும்புகிறீர்கள். இந்த நேரத்தில் பாஜக, ஜூம்லா கட்சிகளைப் போல விஷயங்களை அரசியலாக்க முயற்சிக்கிறது. இந்தமாதிரி பேசுவது சரியாக இல்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து எனக்கு எந்தக்கருத்தும் இல்லை.தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை உண்டு, அவர்கள் தங்கள் கணவரிடமிருந்து மட்டுமே குங்குமத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏன் முதலில் உங்கள் திருமதிக்கு குங்குமம் கொடுக்கவில்லை?.
உங்களின் குடும்ப விவரங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் உங்களால் தான் ஏற்பட்டது. பல்வேறு மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக, அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றியஅரசு இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. முதலில், அவர் (மோடி) தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர், பின்னர் ஒரு காவலாளி என்று அழைத்துக் கொண்டார், இப்போது அவர் குங்குமம் விற்க வந்துள்ளார். அவர் இப்படி இங்கு குங்குமம் விற்க முடியாது
இவ்வாறு அவர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


