பணம் கொடுத்தால்தான் போட்டியிட வாய்ப்பு – எடப்பாடி மீது பகிரங்க குற்றச்சாட்டு

அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அதோடு அவரது ஆதரவாளர்களான 50 க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பறித்தார்.

அதன்பின், செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், முன்னாள் யூனியன் சேர்மேன்கள் மவுதீஸ்வரன், கந்தவேல் முருகன், கருவல்வாடிபுதூர் மோகன்குமார், பொம்மநாய்க்கன்பாளையம் செந்தில் என்கிற கோடீஸ்வரன், கலிங்கியம் அருள் ராமச்சந்திரன், பர்கூர் ஒன்றிய கவுன்சிலர் ராயணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், அத்தாணி பேரூர் செயலாளர் ரமேஸ், சத்தியமங்கலம் காமேஷ், தமிழ்ச்செல்வி ஆகிய 14 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாமஉ சத்தியபாமா, கோபியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது….

அடிப்படை உறுப்பினரில் இருந்தும், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு உள்ளேன். உண்மையிலேயே வருத்தமும், வேதனையும் அடைகிறேன். ஏன் என்று சொன்னால் ஒரு சாதாரண உறுப்பினராக இருந்து தொண்டராக இருந்து என்னுடைய பணியை ஆற்றிக்கொண்டிருந்த வேளையில்,திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை ஜெயலலிதா அம்மா வழங்கினார். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தலைமையிடம் வாய்ப்பு கேட்டேன். பணம் இருந்தால் மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு என்பதை நான் அறிந்தேன். அதனால் போட்டியிடவில்லை.பணம் இருந்தால் புதிதாகக் கட்சிக்கு வந்தவர்களுக்குப் பதவி கொடுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response