எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16 ஆம் தேதி காலை விமானத்தில் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் அன்று மதியம் புதிய துணை குடியரசுத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அதன் பின்பு இரவு 8 மணிக்கு மேல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். பிறகு இரவு தில்லியில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமி, நேற்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணி அளவில் சென்னைக்கு வருவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
அதோடு சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. அதன்பின்பு எடப்பாடி, சென்னை நகருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து, மாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சேலம் புறப்பட்டுச் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று காலை திடீரென இந்த திட்டம் மாற்றப்பட்டது.
தில்லியில் இருந்து சென்னைக்கு காலையில் புறப்படும் திட்டம் இரத்து செய்யப்பட்டு, பகல் 12.05 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டு, மாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தை விட்டு, வெளியில் வராமல் உள்ளிருந்தே மாலை 3.50 மணி விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்லவும் திட்டமிட்டார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் அளிக்க இருந்த வரவேற்பு நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் அதிமுக நிர்வாகிகள் மட்டும் சிலர், சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து, வருகைப் பகுதியில் காத்து நின்றனர். தில்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் 20 நிமிடம் முன்னதாக பிற்பகல் 2.50 மணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி, ஒருவேளை வெளியில் வந்து அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து விட்டு மீண்டும் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்த்துக் காத்து நின்றனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வராமல், உள்ளிருந்தே மாலை 3.50 மணி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏமாற்றத்துடன், விமான நிலையத்தில் இருந்து திரும்பிச் சென்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி தில்லியிலும் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று காலை திடீரென இரத்து செய்து விட்டார்.
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் நேற்று அளிக்க இருந்த வரவேற்பு நிகழ்ச்சியும் திடீரென இரத்து செய்யப்பட்டது.
அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அதிமுகவினர் குழப்பம் அடைந்தனர். இதற்கிடையே, அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மூன்று பேர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று, விமான நிலையத்தின் உள்பகுதிக்குச் சென்று அங்கு இருந்த எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசிவிட்டு வெளியில் வந்தனர்.
இதே விமானத்தில் எடப்பாடியுடன் தில்லியில் இருந்து சென்னை வந்த தம்பிதுரை பாமஉ வெளியே வந்தார். செய்தியாளர்கள் அவரைப் பேட்டி எடுக்க முயன்றதும், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேட்டி எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வேகமாகச் சென்று மகிழுந்தில் ஏறிவிட்டார். அவருடைய முகம் மிகவும் இறுக்கமாகக் காணப்பட்டது.
தில்லியில் அமித்ஷா சந்திப்பின்போது, எடப்பாடியை அவர் கடுமையாக எச்சரித்தார் என்று சொல்லப்படுகிறது.அதன் காரணமாக கடும் அதிர்ச்சியில் எடப்பாடி இருக்கிறார் என்றும் அதனாலேயே இதுபோல திடீரென மாற்றங்கள் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அதிமுக கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.