நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895 இல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 இல் வழங்கப்பட்டது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பான் நாட்டின் நிஹோன் ஹிதான்கியோ என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த அமைப்பு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீச்சில் தப்பியவர்களுக்காக செயல்படும் இயக்கமாகும்.
இந்நிலையில் இந்தஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்காக, 338 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 244 தனிநபர்கள் சார்ந்தது, 94 நிறுவனங்கள் சார்ந்தது.
அமைதிக்கான நோபல் பரிசு நேற்று (அக்டோபர் 10,2025) அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது. விருது அறிவிப்பை தி நார்வேஜியன் நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் அறிவித்தார்.
மரியா கொரினா மச்சாடோ, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அபிமானத்தைப் பெற்றுத் தந்தது. மரியா, வெனிசுலாவின் இராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 இல் வழங்கப்படும்.
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்கவேண்டும், அதற்குரிய எல்லாத் தகுதிகளையும் நான் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவந்தார்.இந்த நிலையில், அவருக்கு அந்தப் பரிசு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் நோபல் பரிசுக்குழு மீது அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.