விஜய் சிக்கலில் நயினாருக்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை – பாஜக பரபரப்பு

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,கரூருக்கு தவெக தலைவர் விஜய் சென்று இருந்தால் அவர் உயிருக்கு யார் உத்திரவாதம் கொடுப்பது? இதனால்தான் அரசிடம் பாதுகாப்பு கேட்டுள்ளனர். விஜய் சென்ற இடத்தில் ஏற்கெனவே கூட்டம் வந்துதான் தள்ளுமுள்ளு உருவானது.
அவர் அங்கேயே இருந்திருந்தால் அவரை அடித்துக் கொன்றிருப்பார்கள். இப்போது மீண்டும் விஜய் அங்கு சென்றால் கூட்டம் வரத்தான் செய்யும், தள்ளுமுள்ளு ஏற்படத்தான் செய்யும். அந்த சாக்குப்போக்கில் விஜய்யையும் சேர்த்து காலி செய்து விட்டால் என்ன செய்வது? மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதை திமுக அரசு செய்யத் தவறிவிட்டது. கரூர் சம்பவத்துக்கு 100-க்கு 200 சதவீதம் திமுக அரசுதான் பொறுப்பு. திமுக அரசால் விஜய்க்கு மட்டுமல்ல, பொது மக்களுக்குமே ஆபத்து இருக்கிறது என்று கூறியிருந்தார்.

காலையில் நயினார் நாகேந்திரன் சொன்ன இந்தக் கருத்துக்குப் பதிலடியாக மாலையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது…

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எந்த இடத்துக்கும் செல்வதற்கு உரிமை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.இந்தியாவில் இருக்கக் கூடிய சில பகுதிகளைப் போல, அனுமதி பெற்றுத்தான் கரூர் செல்லவேண்டும் என்ற நிலை இங்கு கிடையாது. எனவே, விஜய் தைரியமாக கரூர் செல்லலாம். விஜய்யின் பாதுகாப்பை அவர் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். நானும் கரூரைச் சார்ந்தவன் தான். எங்க ஊருக்கு வருவதற்கு அனுமதி எதற்கு? கரூருக்கு வருவது கடினம் என்றால், எங்க ஊரில் பூதங்களா இருக்கின்றன? பூதாகரமான மக்களா இருக்கிறார்களா? அதனால், விஜய் எங்கள் ஊருக்கு வர நினைத்தால் வரலாம். யாரைப் பார்க்க வேண்டுமோ வந்து பார்த்துவிட்டு செல்லட்டும்.

கரூருக்கு செல்வதே ஓர் அச்சுறுத்தல் என்பது போன்ற பிம்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டாம். இது நமது தமிழ்நாட்டை நாமே தாழ்த்தி கீழே இறக்குவதுபோல ஆகிவிடும். கரூருக்கு விஜய் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்துக் கேட்கிறீர்கள். நயினார் நாகேந்திரன் பேசியதை நான் கவனிக்கவில்லை. கரூர்காரனாக, இந்த மண்ணின் மைந்தனாக நான் சொல்வது, கரூர் பாதுகாப்பான ஊர்

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

நயினார் நாகேந்திரன் கருத்துக்கு நேரெதிராக அண்ணாமலை பேசியிருப்பது தமிழ்நாடு பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response