மருதம் – திரைப்பட விமர்சனம்

இராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, ஒரு குழந்தை என அளவான குடும்பத்துடன் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் விதார்த். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறார் விதார்த்.

திடீரென ஒருநாள் கடனுக்காக, அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது.கடன் வாங்காத விதார்த் வெகுண்டெழுந்து வங்கியில் முறையிடுகிறார்.அங்கு, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கும் வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கும் விதார்த், இதில் ஏதோ மோசடி இருக்கிறது என்பதை உணர்கிறார்.நிலத்தை மீட்டாக வேண்டும் என்று களமிறங்குகிறார்.

அவர் முயற்சியில் வென்றாரா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.வசனங்கள் இல்லாமலே தன் முகபாவத்தாலும் உடல்மொழியாலும் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் நன்று.

ஒரு குழந்தைக்கு அம்மா என்றால் பலர் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.துணிந்து ஒப்புக்கொண்டதுடன் அந்த வேடத்தின் தன்மை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார் நாயகி ரக்‌ஷனா.

அருள்தாஸின் வேடம் நல்ல மனிதர்களின் பிரதிபலிப்பு. வழக்கமாகச் சிரிக்க வைக்கும் மாறன், இதில் சிரிக்க வைத்துவிட்டு கடைசியில் கண்கலங்கவும் வைத்துவிட்டார்.இயக்குநர்கள் சரவண சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் ஆகியோரும் சிறப்பு.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மண் மணம் கமழ்கிறது.

அருள் கே.சோமசுந்தரம் ஒளிப்பதிவில் ஒரு வடமாவட்ட கிராமத்துக்குப் போய் வந்தது போல் எண்ணம் வருகிறது.

இயக்குநர் வி.கஜேந்திரன், உள்ளும் புறமும் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும் இடர்ப்பாடுகளைச் சுட்டியிருப்பதோடு அவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் இரு கூட்டத்தைப் பற்றிச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

– சுரேஷ்

Leave a Response