வீடுகளில் திடீர் தீ விபத்து நேர்ந்தால் என்ன செய்ய? – பயிற்சி கொடுக்கும் தீயணைப்புத்துறை

தமிழ்நாடு முழுவதும் 375 தீயணைப்பு நிலையங்களில் ஒரே நேரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தீ பாதுகாப்பு குறித்து ‘வாங்க கற்றுக்கொள்ளவோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு வகுப்பு நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ‘காக்கும் பணி எங்கள் பணி’ என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களைக் காப்பதும் இத்துறையின் முக்கிய பணியாகும். துறையின் பெயருக்கேற்றவாறு இத்துறைப் பணியாளர்கள் ஆபத்தில் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளை பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு காப்பாற்றுகின்றனர்.

தீ பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதற்காக ‘வாங்க காற்றுக்கொள்ளவோம்’ என்ற ஒரு முயற்சியை இத்துறை தொடங்கி உள்ளது.

பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களின் பணியாளர்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவார்கள்.

இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு 3 என்ற விகிதத்தில் காலை 10 முதல் 11 மணி வரை, மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். இதில் ஏதேனும் ஒரு அமர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இத்திட்டம் முற்றிலும் இலவசமானது மற்றும் எந்த ஒரு முன்பதிவும் இல்லாதது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திடீரென சமையல் எரிவாயு உருளையில் தீ பிடித்தால், வீட்டிலுள்ள வாகனங்கள் தீ பிடித்தால், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்கிற பயிற்சிகளை இந்த வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கவிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 375 இடங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது இதுதான் முதல்முறை. இந்த முயற்சியை தீயணைப்புத் துறை இயக்குநரும் டிஜிபியுமான சீமா அகர்வால் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response