
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்
உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில், அவரது வழக்கறிஞர் யாஷ் எஸ்.விஜய் தாக்கல் செய்துள்ள மனுவில்….
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களுக்கு தவெக சார்பிலும், கட்சித் தொண்டர்கள் சார்பிலும் அவசர, மருத்துவ உதவிகள் தாமதமின்றி உடனடியாக வழங்கப்பட்டன.
நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களைக் கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத்
தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை.
தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அவர்களைக் கொண்டே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திருப்பது தவெகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிலர் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திய சதியின் விளைவாகவே உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உண்மைகளை வெளியே கொண்டுவர சுதந்திரமான விசாரணை தேவை.
எனவே, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதில் விஜய்க்கு உடன்பாடில்லை என்றும் அவரை மீறி ஆதவ்அர்ஜுனா இதைச் செய்திருக்கிறார் என்றும் அக்கட்சி வட்டாரங்களில் ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.


