
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம்,அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று அரசினர் தனித்தீர்மானம்
கொண்டுவந்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது….
காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பு,உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி.16 ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஆகியவற்றை மதிக்காமல்,சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின்
ஒப்புதலையும்,ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை ஏற்க முடியாது. கர்நாடக அரசின் இந்தச் செயலுக்கு கடும்எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம்,சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியையும்
ஒன்றியஅரசு அளிக்கக் கூடாது.காவிரி நடுவர் மன்றமும்,உச்சநீதிமன்றமும்,காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக்குறிப்பிட்டு,படுகையின் மொத்த நீரையும்,படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால்,காவிரிப் படுகையில் புதியதிட்டங்களை மேற்கொள்ளவோ,கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது.
இந்த விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை.எனவே,
மேகதாதுவிலோ,காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது புதியநீர்த்தேக்கத் திட்டத்தை,
பிற படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றியும்,ஒன்றிய அரசின் அனுமதியின்றியும் மேற்கொள்ளக்கூடாது என
கர்நாடகாவுக்கு ஒன்றியஅரசு அறிவுறுத்த வேண்டும்.கர்நாடக அரசின் விரிவான திட்டஅறிக்கையை ஒன்றிய நீர்வளக்குழுமம் பரிசீலிக்கவோ,அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ,அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்கீழ் புதிய நடுவர்மன்றத்தை ஒன்றியஅரசு
அமைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசியதாவது…..
அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை,நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால்,மக்களுக்கான பிரச்சினை என்றால்,எல்லால் கட்சிகளுமே மக்கள் பக்கம்தான் நிற்கும்.நமது விவசாயிகள்,மக்களுக்காக நிற்கவேண்டியது நமது கடமை.நதிநீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
அந்த உணர்வு அடிப்படையில்,கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு,யாரும் யாரையும் குறைசொல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டும்.நமது
விவசாயிகள்,தமிழக மக்களுக்காகக் கொண்டு வரப்படும் இந்தத் தீர்மானத்தை ஒருமித்த கருத்துடன் அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைத் தொடர்ந்து,தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக,அதிமுக,காங்கிரசு,விசிக,பாமக,இந்திய
கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட்,தேமுதிக,கொமதேக,மதிமுக,மமக,மஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,
மேகதாது அணை கட்டும் பிரச்சினை ஒரு புதியவிவாதம் என்பதால்,மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்படி,புதிய நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது எனும் திருத்தத்தைச் சேர்க்கவேண்டும் என்றார்.
அதற்கு முதல்வர் விஜய்,மேகதாது பிரச்சினை குறித்து எனது தலைமையில் கடந்த மே 26 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,தனி நடுவர்மன்றம் அமைப்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,தனி நடுவர்மன்றம் அமைக்கத் தேவையான சட்டநடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு
வருகின்றன.எனவே,எதிர்க்கட்சித் தலைவர் அளித்த கருத்தை தனித்தீர்மானத்தில் கூடுதலாகச் சேர்க்கலாம்
என்றார்.
அதன்பிறகு,முதல்வர் முன்மொழிந்த திருத்தப்பட்ட தீர்மானம்,பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அனைத்துக்கட்சிகளுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.


