எடப்பாடிக்கு பத்துநாட்கள் கெடு விதித்த அமித்ஷா – அதிர்ச்சி தகவல்

அதிமுக உட்கட்சி சிக்கலில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று வெளிப்படையாகச் சொன்னார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.ஆனால் முழுக்க முழுக்க அந்த வேலையை மட்டுமே அமித்ஷா தொடங்கி அண்ணாமலை நயினார் நாகேந்திரன் வரை எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் தில்லிக்கு அழைக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.அங்கு அமித்ஷா உடனான சந்திப்பின்போது அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்தாக வேண்டும் என்று எடப்பாடியிடம் அமித்ஷா உறுதியாகச் சொல்லியிருக்கிறாராம்.

அதன்பின் தமிழ்நாடு வந்த எடப்பாடி பழனிச்சாமி அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முதலில் செங்கோட்டையன் தில்லி போனார்.அதன்பின் எடப்பாடி வரவழைக்கப்பட்டார்.இவற்றிற்குப் பின் என்ன நடக்கிறது?

அதிமுக வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தால், அமித்ஷா உடனான சந்திப்பில் என்ன நடந்தது? என்று எடப்பாடி வெளிப்படுத்தவில்லையெனினும் உள்ளுக்குள் முக்கிய நிர்வாகிகளிடம் அதுகுறித்துப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சசிகலா அம்மையாரை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் டிடிவி.தினகரன் கூட்டணிக் கட்சியாக இருக்கட்டும் ஓ.பன்னீர் செல்வத்தை மட்டும் சேர்த்துக் கொள்ள முடியாது எனும் நிலையெடுப்போம் என்று ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.அதற்கு ஒரு சிலர் ஆதரவும் பலர் அது சாத்தியமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்களாம்.

இதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

இதனிடையே, தில்லியிலிருந்து வந்த அழைப்பில், இந்தச் சிக்கலை நீட்டித்துக் கொண்டே இருக்கமுடியாது.விரைந்து முடிவெடுத்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளுக்குச் சென்றாக வேண்டும் எனவே காலந்தாழ்த்தாமல் முடிவெடுத்தாக வேண்டும் உங்களுக்கு அதிகபட்சம் இம்மாத இறுதிவரை நேரம் கொடுக்கிறோம் அதற்குள் சுமுக முடிவை எடுத்தாக வேண்டும் அப்படிச் செய்யவில்லையெனில் என்ன செய்ய வேண்டுமோ? அதை நாங்களே செய்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதனால் எடப்பாடி தரப்பு பரபரப்பாக இருக்கிறதாம்.

எப்படியிருந்தாலும் இன்னும் பத்து நாட்களுக்குள் அனைவரும் ஒருங்கிணைவது என்கிற நிலையை நோக்கித்தான் எடப்பாடி சென்றாக வேண்டும், மாற்றி யோசித்தால் அவர் வெளியேற வேண்டும் அல்லது உள்ளே செல்லவேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

கேட்கவே அதிர்ச்சியாக இருக்கும் இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறதென்கிறார்கள்.

பத்துநாட்களில் முடிவு தெரிந்துவிடும் அது நல்லதாகவே இருக்கும் என்று அதிமுக மேல்மட்டத்தில் பேச்சு. என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response