டிடிவி.தினகரன் மீது எடப்பாடி கடும் விமர்சனம் – ஏன்?

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி கிராமம், வாத்திப்பட்டி ஏரி, பெரியசோரகை கிராமம், வைரன் ஏரி ஆகியவை, மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் மூலம் நிரம்பியது. இந்த ஏரிகளை எடப்பாடி பழனிச்சாமி நேற்று பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உங்களது சுற்றுப்பயணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கலந்து கொள்கின்றனரே என்று செய்தியாளர் கேட்டதற்கு, தவெக தொண்டர்கள், அவர்களாகவே எங்களது பிரசாரத்தில் கலந்து கொள்கிறார்கள். நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன?. நாங்கள் கூட்டணி வைத்ததைப் பொறுக்க முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புகின்றனர் என்று எடப்பாடி தெரிவித்தார்.

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு, ‘நாங்கள் ஏற்கனவே ஒவ்வொரு முறையும் தெளிவாகக் கூறி வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி பற்றி சொவோம் என அறிவித்திருக்கிறோம். சில நேரங்களில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட, கூட்டணி குறித்து தெரிவித்திருக்கிறோம். கூட்டணி அமைந்து விட்டால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவருடன் நீங்கள் தொலைபேசியில் பேசியதாகச் சொல்கிறார்களே?. ஏதாவது ஆறுதல் தெரிவித்தீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, இல்லை. நாங்கள் ஏற்கனவே மக்களைப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் ெசால்லி விட்டோம். அவர்களுக்கு எல்லாம் தெரியும். சம்பவம் நடந்ததும் எனக்குத் தகவல் கிடைத்தது. நான் சென்னையில் இருந்தேன். உடனே இரவே விரைந்து கரூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன் என்றார்.

பாமக நிறுவனர் இராமதாசை மருத்துவமனையில் சந்தித்த போது, அரைமணி நேரத்திற்கும் மேலாக கூட்டணி குறித்துப் பேசியதாகக் கூறுகிறார்களே என செய்தியாளர் கேட்டதற்கு, அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் சென்று பார்த்தேன். அவ்வளவு தான் என்றார்.

அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர்ந்து விட்டால், பாஜகவை இபிஎஸ் கழட்டி விட்டு விடுவார் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, டிடிவி தினகரன் நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா? அதிமுக 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. அதற்குத் தகுந்த மாதிரி கேள்வி கேளுங்கள். யார், யாரோ பேசியதற்கு எல்லாம் கேள்வி கேட்காதீர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான விமர்சனத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாராவது ஆதரிப்பார்களா? என்று எதிர்பார்த்தார். அவர் நினைத்தது நடக்கவில்லை. அதனால், இப்படிப்பட்ட வார்த்தையை கக்கிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று டிடிவி.தினகரன் தீவிரமாகச் சொல்லிவருகிறார்.இது எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது எனவேதான் டிடிவி.தினகரன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response