முகம் மூடிய விவகாரம் ஊடகத்தினரை மிரட்டும் எடப்பாடி – பிரஸ் கிளப் கண்டனம்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுகவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

டெல்லியில் வசிக்கும் பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் பல்வேறு முன்னணி தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது “தி கேபிடல்” என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், பல்வேறு ஊடகங்களுக்கு தலைநகர் டெல்லியில் நடைபெறும் செய்திகளையும் வழங்கிவருகிறார்.

இந்நிலையில்,16.09.25 அன்று அதிமுக பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்த நிகழ்வு குறித்து திரு.நிரஞ்சன் குமார் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்திப்பை முடித்துவிட்டு காரில் வெளியே வந்த திரு.எடப்பாடி பழனிச்சாமி முகத்தை கைகுட்டையால் மூடியிருந்தது குறித்த செய்தியை வீடியோ ஆதரத்துடன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த செய்தி அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

அதிமுக தரப்பில், திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைகுட்டையால் முகத்தை துடைத்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கமும் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக அதிமுக சார்பாக திரு.நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிமுக சமூக வலைதளப் பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் தலையும் இல்லாத, வாலும் இல்லாத அந்த மொட்டைக் கடிதமும் அத்துடன் பகிரப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், திரு.நிரஞ்சன் குமார் அவர்களுக்கு எதிராக, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவரை மிகவும் தவறாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், திரு.நிரஞ்சன் குமாரை மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
அந்தக் கடிதம், திரு.நிரஞ்சன் குமார் மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கும், விகடன் நிறுவனத்திற்கும் எதிராக கீழ்த்தரமான கருத்தை தெரிவித்த பாஜக மாநிலத்தலைவர் திரு.நைனார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை வரவேற்கும் வகையிலும் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவிடமிருந்து பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இப்படி ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆகவே, பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமாருக்கு எதிராக அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொறுப்பான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய அதிமுக தன் பொறுப்பை உணர்ந்து நோட்டீசை திரும்பப் பெறவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response