கரூர்-திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டி அருகே நேற்று மாலை நடந்த திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது….
திறமை, உழைப்பு, அறிவு, ஆற்றல் அனைத்தையும் ஒருங்கே பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழி நின்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் நாம். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து நாம் எதிர்கொண்ட அனைத்திலும் வெற்றி பெற்று வந்துள்ளோம். எதிரிகளைக் கலங்கடிக்கும் வெற்றிகளைப் பெற்று வந்துள்ளோம். இந்த வெற்றிப்பயணம் 2026 லும் தொடரும். திராவிட மாடல் 2.0 நிச்சயம் அமையும். நான் பெருமையுடன் சொல்கிறேன்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கிறது. எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற கொள்கை உணர்வுடைய தொண்டர்கள் இருக்க மாட்டார்கள்.இப்படி கடுமையாக உழைக்கவும் மாட்டார்கள். “கழகம் நம்மைக் காத்தது! நாம் கழகத்தைக் காக்க வேண்டும்” என்று உழைக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்க முடியாது! உங்களுக்குத் தலைமைத் தொண்டனாக இருப்பது, என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறு.
உங்கள் உழைப்பைத் தொடர்ந்து கொடுத்து, திராவிடம் உயர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று 2026 தேர்தலிலும் நீங்கள் களப்பணியாற்ற வேண்டும்! அதன்மூலமாக, தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது என்று நாம் புது வரலாறு படைக்க வேண்டும்! வரலாறு படைக்கலாமா! தயாராகி விட்டீர்களா?. அதனால் தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை முன்னெடுத்து அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று அனைவர் வீடுகளுக்கும் சென்று ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை இயக்கத்தில் சேர்த்துள்ளோம்.
ஒரு கோடி குடும்பங்கள் நம்மை நம்பி இணைந்துள்ளார்கள் என்றால் என்ன காரணம். தமிழ்நாட்டைக் காக்கும் காவலன் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். அதற்குத் துணையாக இருப்போம் என்று மக்களும் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் அது காவிக்கொள்கை. 2000 ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கொள்கையின் அரசியல் இயக்கம் யார் என்றால் பாஜக. ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
2 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி என்ன பேசி இருக்கிறார்? கடந்த அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக தான் என்று அவர் உண்மை பேசி இருக்கிறார். அந்த கைப்பாவை அரசைத் தூக்கி எறிய திமுக தான் காரணம் என ஒன்றிய பாஜக அரசு நமது மீது வன்மத்தைக் காட்டி வருகிறது. ஆகையால் தான் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக, திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா?. இந்தியாவில் முதல்முறையாக மாநிலக் கட்சி ஆட்சி பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம். 74 ஆண்டு கால வரலாறு உள்ளது நமக்கு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என்று தான் பேசுகின்றனர். இப்பவும் சில பேர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது திமுகவிற்கு நாங்கள் தான் மாற்று என்று பேசுகின்றனர். என்ன மாற்றப் போகின்றனர். என்ன மாற்றப் போறாங்க. தமிழ்நாட்டு வளர்ச்சியை மாத்தி பின்னாடி இழுத்துட்டு போகப்போகிறார்கள். நம்ம கொள்கையோடு சிறந்த கொள்கையை யாராவது பேசுகிறார்களா. மாற்றம் மாற்றம் என்று சொன்ன எல்லாரும் மறைந்து போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றும் மறையவில்லை. இது தான் தமிழ்நாடு பாலிடிக்ஸ். நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. தொகுதி வரையறை என்று சொன்னவுடனே எதிர்த்து நிற்கிறோம். கவர்னரை வைத்து நம்மை முடக்க நினைத்தால் சட்ட ரீதியாக அதை எதிர்த்து நிற்கிறோம். முக்கியமாக மாநிலங்கள் தான் வலிமையான நாட்டுக்கு அடித்தளம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல மத்திய அரசு அல்ல ஒன்றிய அரசு என்று அடித்துச் சொல்கிறோம். இப்படி போராடிப் போராடி தமிழ்நாட்டைத் தலை நிமிர்த்துகிறோம்.
இப்படி தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை ஒரு நாளும் தலைகுனிய விடமாட்டோம். அதனால்தான் சொல்கிறேன், பேரறிஞர் அண்ணா கொள்கைப் பட்டாளமே, தலைவர் கலைஞருடைய உயிரினும் மேலான உடன்பிறப்புகளே, தனி நபர்கள் தோன்றுவார்கள், மறைவார்கள், கட்சிகள் வரும், போகும். ஆனால், தமிழ்நாட்டின் தனித் திறமை நிரந்தரமானது. தமிழ் மொழியின் பெருமை நிரந்தரமானது. நம்மளுடைய மக்களின் உரிமை காக்கப்படணும். இந்த தமிழ் மண்ணுதான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது.
இந்த மண்ணைக் காக்கின்ற பொறுப்பும், கடமையும் நமக்குத் தான் இருக்கு. டெல்லி நம்ம மேல் எப்படி எல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒன்றா இரண்டா, இந்தி மொழியைத் திணிக்கிறார்கள், மாணவர்களைப் பழி வாங்கக்கூடிய நீட் தேர்வை விலக்க மறுக்கிறார்கள். நமது பசங்க படிப்பதற்கான கல்வி நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள். கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையைப் பறிக்கிறார்கள். ஆனால் அந்நாளும் சரி , இந்நாளும் சரி அடக்குமுறைக்கு இங்கு நோ என்ட்ரி தான்.
ஆதிக்கத்துக்கு இங்க நோ என்ட்ரி தான். திணிப்புக்கு இங்க நோ என்ட்ரி தான். மொத்தத்தில பாஜகவுக்கு இங்கு நோ என்ட்ரிதான். இது பெரியார் அண்ணா கலைஞர் செதுக்குன தமிழ்நாடு. மூன்று முறை ஒன்றியத்தில் தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழ்நாட்டில் மட்டும் உங்க மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லை ஏன், இன்னுமா உங்களுக்கு எங்களைப் பற்றித் தெரியல. இந்த முப்பெரும் விழாவை டிவில, சோசியல் மீடியாவில் பார்த்துக் கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக நாம் போராடி எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்து நாம் பெற்றுத் தந்த உரிமை எல்லாம் நம் முன்னாடியே பறிபோக அனுமதிக்கலாமா?.
பாஜகவை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற நோக்கில் தான் நகர்வார்கள். ஏற்கனவே காஷ்மீரில் ட்ரையல் பார்த்து விட்டார்கள். எப்படி இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று ஒரு நிலை உருவானதோ தமிழ்நாடு போராடி மொழிப்போர் நடத்திய ஒட்டுமொத்த இந்தியாவைக் காப்பாற்றியதோ, அதுபோல் உரிமைப்போரை நடத்தி நாட்டைக் காப்பாற்றும் நிலை நமக்கு உள்ளது. நாம் செய்யவில்லை என்றால் நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும். இதற்குப் போராடவில்லை என்றால் எதற்குப் போராடுவது. இதுதான் முக்கியம்.
இந்தப் போராட்டத்தில் முன் களவீரனா, 23 வயதில் எமர்ஜென்சியை எதிர்த்து சிறை சென்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் உங்களுடன் இருக்கிறேன். இந்த மேடையில் நின்று உறுதியுடன் சொல்கிறேன். நம் தாய்மார்கள், உழவர்கள், சகோதரர்கள் அனைவரையும் காக்க நான் தொடர்ந்து உழைப்பேன். தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுப்பேன். நமக்கு துணையாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் விதைத்த இன உணர்வு நம்மிடத்தில் உள்ளது.
8 கோடி தமிழ் மக்களின் ஆதரவும், ஆற்றலும் நமக்கு பக்க பலமாக உள்ளது. இதே உறுதியுடன் போராடுவோம். இப்பொழுது நாம் முன்னெடுக்கும் போராட்டம், ஒரு கட்சிக்கான போராட்டமோ, முதலமைச்சர் என்ற பொறுப்புக்கான போராட்டமோ, ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டமோ அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்டம், தமிழ்நாட்டுக்கான போராட்டம். தமிழ்நாடு முழுக்க ஓரணியில் திரள வேண்டும்.
கரூர் மண்ணில் நின்று பெரியார் பிறந்த நாளில் உரக்கச் சொல்லுவோம். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம். டெல்லிக்குக் கேட்கும் அளவிற்கு அனைவரும் சேர்ந்து சொல்லவேண்டும், தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அனைவரும் ஊருக்குத் திரும்பும் நேரத்தில் பத்திரமாகச் செல்லவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.