நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பாஜக மேலிடத்தின் பின்புலத்தில்தான் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தத் தகவல்களை பாஜக தலைவர்களும், தவெக நிர்வாகிகளும் மறுத்தனர்.
ஆனால், திடீரென விஜய்க்கு ஒய் கேட்டகிரி பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியது ஒன்றிய அரசு.அதன்பின் ஆதவ் அர்ஜுனாவை அக்கட்சியில் சேர்த்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா மீதும், அவரது மாமனார் லாட்டரி மார்ட்டின் மீதும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் பல வழக்குகள் உள்ளன. அவர்களது வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் பலமுறை வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அதிரடி சோதனை நடத்தின. இதனால் இக்கட்டில் சிக்கியது மார்ட்டின் குடும்பம்.இதைக் காட்டித்தான் ஆதவ் அர்ஜுனாவை ஒன்றிய அரசு இயக்கத் தொடங்கியது.
அப்போது திமுகவில் சேர்ந்து ஏதாவது பதவி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தார் ஆதவ். ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி என்று திமுக கைவிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விசிக கட்சியில் இணைந்தார். அங்கு மாநில நிர்வாகப் பொறுப்புகளை வாங்கினார். அங்கு இருந்தபடியே கூட்டணியை உடைக்கும் வேலையைத் தொடங்கினார். திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்று அதிமுகவும், பாஜகவும் கூறத் தொடங்கின.
அந்த சமயத்தில் திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துகளை ஆதவ் கூறத் தொடங்கினார். இதனால் அவருக்கு விசிகவிலேயே எதிர்ப்புகள் ஏற்பட்டது. முக்கியத் தலைவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். செயற்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் திமுக கூட்டணிக்கு எதிராகப் பேசினார். தனக்கு பதவி கொடுக்காத திமுகவை பழிவாங்குவதற்காகவே கூட்டணியை உடைக்கிறேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாக விசிகவினரே குற்றம்சாட்டினர். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
திமுக கூட்டணியை உடைக்க ஆதவை வைத்து பாஜக போட்ட திட்டம் நொறுங்கிவிட்டது. இதனால் அடுத்த திட்டத்தை கையில் எடுத்தது ஒன்றிய அரசு. அப்போதுதான் விஜய் கட்சி தொடங்கினார். இதனால் விஜய் கட்சியில் பாஜகவின் திட்டப்படி சேர்ந்தார் ஆதவ் அர்ஜுனா. அங்கும் விஜய் கட்சியின் மாநாட்டுச் செலவுகளை ஏற்றுக் கொண்டார்.அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகளையும் தனது பண பலத்தால் வளைத்துப் போட்டார். தற்போது விஜய் மட்டுமல்ல, நிர்வாகிகளும் அவரது கையில்.
இதனால், தில்லியின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப அவர் ஆடத்தொடங்கினார். தமிழ்நாடு அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறும்படி கேட்டுக் கொண்டதால், ஆதவின் எண்ணப்படியே விஜய் பேச்சுக்கான அறிக்கை தயாரானது. இதனால் பெயருக்குத்தான் பாஜகவை பேசுவார். எங்குமே மோடியைப் பற்றியோ, அமித்ஷாவைப் பற்றியோ குற்றம்சாட்ட மாட்டார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வார். மார்ட்டின் குடும்பத்திற்கும் பாஜகவுக்கும் உள்ள உறவுக்கு பெரிய சாட்சியே, அவர் அக்கட்சிக்கு மட்டும் வழங்கிய பல ஆயிரம் கோடி தேர்தல் நிதிதான்.
இதனால்தான் ஏற்கனவே திமுக மீது வெறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனா, பாஜகவுடன் இரகசிய கூட்டு சேர்ந்து, விஜயை முழுமையாக திமுக எதிர்ப்பு அரசியலுக்குக் கொண்டு வந்தார். பணபலம் மிக்க ஆதவ் கைப்பிடிக்குள் தற்போது விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சென்று விட்டனர். இதனால்தான் விஜய் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகள் நடந்தாலும், இதை விட பெரிய சம்பவம் நடக்கும்வரை திட்டத்தை மாற்றாமல் பார்த்துக் கொண்டார் ஆதவ் அர்ஜுனா.
இதனால்தான் கரூரில் கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டாலும் அவர்தான் விடாப்படியாக விஜயின் பேருந்தை கூட்டத்திற்குள் செல்லும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலை பெரிதாக இருந்தாலும், பேருந்தும் பெரிதாக இருந்தது. அதாவது பேருந்து நின்றால் கண்டிப்பாக நெரிசல் ஏற்படும் என்று தெரிந்து காவல்துறை எச்சரிக்கை செய்தது. ஆனால் அந்த எச்சரிக்கையை வேண்டும் என்றே ஆதவ்தான் உதாசீனப்படுத்தி பேருந்தை இயக்கியுள்ளார்.
இதற்குக் காரணம், மொத்த செலவையும் ஆதவ் பார்த்துக் கொள்வதால், அவரை மீறி விஜய்யால் எதுவும் செய்ய முடியாத நிலைதான் தற்போது தவெகவில் உள்ளது என்கின்றனர் அந்த கட்சியின் நிர்வாகிகள்.
இப்போது பெருந்துயர் நடந்தவுடன் தனக்கு ஆதரவு கேட்டு ஒன்றிய உள்துறை அமைச்சரின் காலில் விழத்தான் தில்லி சென்றிருப்பதாக பாஜகவின் தில்லி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பாஜகவும் அடுத்த ஒரு அதிரடி திட்டத்தைத் தயாரித்துள்ளதாம். எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக முறைத்துக் கொண்டு வருகிறார். கூட்டணி அமைச்சரவைக்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறார். இதனால்தான் அமித்ஷாவும் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால் விஜய், கூட்டணி ஆட்சி திட்டத்திற்கு ஒப்புக் கொள்வதால், அவருடன் கூட்டணியை ஆதவ் மூலம் ஏற்படுத்த கடைசிக்கட்ட திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கூட்டணி அரசு அமைக்கும் பட்சத்தில், பாஜகவுக்கு முதலமைச்சர் பதவி, ஆதவுக்கு முக்கிய பதவி என்று பேசியுள்ளதாகவும் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குச் சம்மதித்தால், ஆதவ் மட்டுமல்ல விஜய்யையும் காப்பாற்ற தில்லி தீவிரமாக களம் இறங்கும் என்கின்றனர் தில்லி தலைவர்கள். ஆதவ்வின் தில்லி காய் நகர்த்தல்கள் வெற்றி பெறுமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்கின்றனர்.
ஆதவ்வின் தில்லி பயணமும் பாஜகவின் திட்டத்தையும் அறிந்து எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.