சசிகலா எடப்பாடி டிடிவி.தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம், எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு உள்ளிட்ட பல முடிவுகளை எடுத்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்குச் சாதகமாக வந்ததைத் தொடர்ந்து, இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ்.

அப்போது அவர் கூறியதாவது….

அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். 3 முறை முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர். உயிரோடு இருந்தவரையில் யாராலும் வெல்ல முடியாத முதலமைச்சராக எம்ஜிஆர் பதவி வகித்தார். 30 ஆண்டு காலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாகச் செயல்பட்டார். 17 இலட்சம் உறுப்பினர்களை 1.30 கோடி உறுப்பினர்களாக அதிகரிக்கச் செய்தவர் ஜெயலலிதா. எதிர்க்கட்சிகளின் சதிவலைகளை முறியடித்து அதிமுகவை மாபெரும் இயக்கமாக செயலலிதா மாற்றிக்காட்டினார். தமிழ்நாட்டில் 16 ஆண்டுகாலம் முதலமைச்சராகப் பதவி வகித்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெயலலிதா ஆட்சி புரிந்தார்.

அதன்பின் பொறுப்பேற்ற எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. மீண்டும் தமிழகத்தில் ஆளும் பொறுப்பிற்கு ஏற்ப, கழகம் ஒன்றுபட வேண்டும்; ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கசப்புகளை மறந்து, அனைவரும் ஒன்றுபட்டு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

அதிமுகவில் இரட்டைத் தலைமை என்பதெல்லாம் பிரச்சனையில்லை; கூட்டுத் தலைமையாகச் செயல்படுவோம். அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமியும் நானும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டோம்.

அதிமுக ஒன்றுபட்டு தேர்தலைச் சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. கூட்டுத்தலைமை வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிச்சாமியோடு பணியாற்றி வந்தோம். 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு முழு ஆதரவு தந்தோம். ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைப்பு ஒன்றரைக் கோடி தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிகளுக்கு உரிய எதிர்க்கட்சியாக மக்கள் விரோதப் போக்கை எதிர்த்துக் குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவினர் உறுதியாக நின்று செயல்பட வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் என யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து அதிமுக செயல்படவேண்டும்

இவ்வாறு கூறினார்.

Leave a Response