58 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரை காங்கிரசிடம் இழந்த பாசக – மோடி அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு காலக் கோட்டையாக இருந்த நாக்பூரில் பாசக படுதோல்வியைத் சந்தித்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே தலைமையிலான, ‘மகா விகாஸ் அகாடி கூட்டணி’ அரசு ஆட்சி செய்கிறது. இதில், சிவசேனா, தேசியவாத காங்கிரசு மற்றும் காங்கிரசுக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 78 சட்டமேலவைத் தொகுதிகளில் காலியாக இருந்த அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர் ஆகிய பட்டதாரி தொகுதிகளுக்கும், புனே, அமராவதி ஆகிய ஆசிரியர்கள் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, துலே நந்துபர் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்தது.

இதில், தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தலா 2 தொகுதிகளிலும், சிவசேனா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. பாசக 4 இடங்களில் போட்டியிட்டது. பாசக ஆதரவுடன் ஒரு ெதாகுதியில் சுயேச்சை போட்டியிட்டார். இதில், 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வாக்களித்தனர். இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று பிற்பகல் வரை நடைபெற்றது.

இதில், அவுரங்காபாத் மற்றும் புனே பட்டதாரி தொகுதிகளில் தேசியவாத காங்கிரசு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அமராவதியில் போட்டியிட்ட சிவசேனா, சுயேச்சை வேட்பாளரிடம் தோற்றது. புனே ஆசிரியர் தொகுதியில் காங்கிரசு வெற்றி பெற்றது.

அதேபோல்,பாசகவின் 58 ஆண்டு காலக் கோட்டையாக கருதப்பட்ட நாக்பூர் தொகுதியில் காங்கிரசு வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட காங்கிரசு வேட்பாளர் அபிஜித் வன்ஜாரி 61,701 வாக்குகளும், பாசக வேட்பாளர் சந்திப் ஜோஷி 42,791 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியை இழந்தது, பாசகவுக்குப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.இங்கு தோல்வியைத் தழுவிய பாசக வேட்பாளர் சந்திப் ஜோஷி, தற்போது நாக்பூர் மாநகர மேயராக பதவி வகித்து வருகிறார்.

இந்தத் தோல்வியால் படித்தவர்கள் அனைவரும் பாசகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து மோடி அதிர்ச்சியடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response