94 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகநிறுவனம் விகடன் குழுமம். இந்நிறுவனம் கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி ஒரே நாளில் 177 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது.
உங்களில் யாருக்கெல்லாம் தொலைபேசி அழைப்பு வருகிறதோ அவர்கள் எல்லாம் வெளியேறத் தயாராகுங்கள் என்கிற அறிவிப்பினால் எல்லா ஊழியர்களுமே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
அதன்பின் 177 பேருக்கு தொலைபேசியில் அழைத்து நீங்களாக பதவிவிலகல் கடிதம் கொடுத்துவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இவர்களில் 87 பேர் நேரடியாக விகடன் குழும இதழ்களின் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர்கள். அவர்கள் தவிர புதிய செயலிக்கான குழு தொழில்நுட்பக்குழு என எல்லாப் பக்கங்களிலும் ஆட்குறைப்பு செய்திருக்கிறது விகடன் நிறுவனம்.
இது இதழியல் உலகில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பாரம்பரியம் மிக்க நிறுவனம் மூன்று மாத நெருக்கடிக்காக ஊழியர்களைக் கைவிடலாமா? என்று பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
176 தொழிலாளர்களை மனசாட்சியின்றி பணிநீக்கம் செய்துள்ள விகடன் குழுமத்தைக் கண்டித்து மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்திற்கு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் & சிறந்த அறிமுக இயக்குநருக்குமான விருதையும் விகடன் குழுமத்திற்கே திரும்ப அனுப்புகிறேன். #stopvikatanlayoff
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதனால் அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.