அதிகாரக் குவிப்பில் மட்டும் கவனமாக இருக்கிறார் மோடி – சோனியாகாந்தி கடும் தாக்கு

கொரோனா வைரஸ் பாதிப்பு, நாட்டின் பொருளாதாரச் சூழல், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரசுக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 22 எதிர்க்கட்சிகள் கூடி இன்று ஆலோசித்தன.

காணொலி மூலம் நடந்த ஆலோசனைக் கட்டத்தில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 22 கட்சிகள் பங்கேற்றன. இதில் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 22 எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாக உம்பன் புயல் ஒடிசாவிலும், மேற்கு வங்கத்திலும் ஏற்படுத்திய சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. .

இரு மாநிலங்களிலும் நிவாரணப் பணிகளுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். புயலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறோம். இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட புயல் சேதத்துக்குத் தாமதிக்காமல் நிவாரண உதவியை வழங்கிட வேண்டும் என்று தீர்மானத்தில் வலியறுத்தப்பட்டது.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் காங்கிரசுக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் மத்திய அரசைக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

அவர் பேசியதாவது…..

சனநாயகத்தையும், கூட்டாட்சியின் தத்துவத்தையும் மறந்துவிட்டு மத்திய அரசு செயல்படுகிறது. ஏழைகள் மீது இரக்கமற்று மத்திய அரசு இருக்கிறது. சீர்திருத்த நடவடிக்கை எனும் பெயரில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்கிறது

மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தை மையமாக வைத்தே உள்ளன. கூட்டாட்சித் தத்துவம் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளார்ந்த பகுதி. ஆனால் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகள் இருக்கின்றன, நிலைக்குழு இருக்கிறது என்பதையே மறந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. எந்தத் தகவலும் இல்லை.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு அறிவித்தபோது அதை காங்கிரசுக் கட்சி வரவேற்றது. ஆனால் தொடர்ந்து 4 கட்ட ஊரடங்கு அறிவித்த நிலையில் அதன் மூலம் கிடைக்கும் பலன் குறைந்து வருகிறது.ஊரடங்கை எவ்வாறு தளர்த்துவது என்ற திட்டமிடல் இல்லாமல் மத்தியஅரசு இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரச் சூழல் முடங்கியுள்ளது. உலகின் பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் உடனடியாக பொருளாதாரத்தைத் தூண்டிவிடும் உதவிகளை அரசு அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பிரதமர் அறிவித்த ரூ.20 இலட்சம் கோடி நிதித்தொகுப்பும், அதைத் தொடர்ந்து 5 நாட்களாக பிரித்துப் பிரித்து வாசித்த நிதியமைச்சர் உரையும், நாட்டின் கொடூரமான நகைச்சுவையாகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமின்றி, வறுமையில் இருக்கும் 13 கோடி குடும்பங்கள், நிலமில்லா விவசாயிகள், விவசாயக் கூலிகள், சுயதொழில் புரிவோர், சிறு, குறு தொழில்கள் செய்வோர், அமைப்புசாரரத் தொழில்கள் அனைத்தையும் மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

பிரச்சினைக்கு மத்திய அரசிடம் தீர்வில்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. ஏழைகள் மீதும், புலம்பெயர் தொழிலாளர்கள் மீதும் இரக்கமற்று இருப்பது நெஞ்சை நொறுங்கச் செய்கிறது.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

Leave a Response