விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் டிசம்பர் 7 அன்று மாலை சென்னை புழல் பகுதியில் தனியார் மனமகிழ் மன்றம் ஒன்றைத் திறந்து வைத்தார்.சென்னை புழல சிறைக்கு எதிரே சில கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்திருக்கிறது.
சைவ உணவகம்,நீச்சல் குளம், டென்னிஸ் விளையாட்டு மைதானம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் ஆகிய வசதிகளுடன் கூடியதாக அந்த அரங்கம் அமைந்துள்ளது.
இந்நிலையில், மது அருந்த பார் வசதியுடன் கூடிய அந்த கிளப்-ஐ திறந்து வைத்தார் திருமாவளவன். மது ஒழிப்பு மாநாடு நடத்தியவர் இப்படிச் செய்யலாமா? என்கிற விமர்சனங்களுடன் செய்திகள் வெளியாகின.
பாரம்பரியம் மிக்க பத்திரிகை என்று சொல்லப்படும் விகடன் நிறுவனமும் இந்தச் செய்தியை சரியாக விசாரிக்காமலேயே வெளியிட்டது.
இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…
7.12.2024 மாலை புழல் அருகே “ஜே கிளப் “ நிறுவனத்தின் சைவ உணவகம், நீச்சல் குளம், பேட்மின்டன் விளையாட்டரங்கம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் ஆகியவற்றை விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் திறந்து வைத்தார்.
ஜே கிளப் நிறுவனத்தின் இயக்குனர் திரு.பாஸ்கரன் அவர்கள், தலைவர் மீதான பேரன்பினால் அந்நிகழ்வுக்கு அழைத்திருந்தார். அவரது அழைப்பையேற்றுத் தலைவர் பங்கேற்றார்.
ஆனால், அங்கே
“மது பாரினைத் “ திறந்து வைத்ததாக அவதூறு பரப்புகின்றனர்.
இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அண்மையில்,அம்பேத்கர் நூல் வெளியிடத் தகுதியான தலைவர் திருமாவளவனைப் புறக்கணித்து விளம்பர வெளிசத்துக்காக அந்நூல் வெளியீட்டு விழாவை நடத்திய விகடன் நிறுவனம் உடனடியாக இப்படி ஒரு தவறான செய்தியையும் வெளியிட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.இது விகடன் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்பும் வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.