உலகக் கோப்பை ஆச்சரியம் – பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கை பெரும் தோல்வி

12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் நேற்று (மே 31) நடந்த 3 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொண்டது.

நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்றதும் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மட்டை பிடித்த இலங்கை அணியின் திடிமன்னே முதல் ஓவரிலேயே (4 ரன்) எல்.பிடபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அணித்தலைவர் கருணாரத்னேவும் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் அணியை சற்று மீட்பது போல் தெரிந்தது.

ஸ்கோர் 46 ரன்களை எட்டிய போது குசல் பெரேரா (29 ரன்) ஆட்டம் இழந்ததும் மறுபடியும் இலங்கை அணி ஊசலாடியது. கருணாரத்னே நிலைத்து நின்று ஆடினாலும், மறுபுறம் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக விழுந்தன.

குசல் மென்டிஸ் (0), தனஞ்ஜெயா டி சில்வா (4 ரன்), மேத்யூஸ் (0) ஆகிய முன்னணி வீரர்களும் சோபிக்கவில்லை.

29.2 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 136 ரன்னில் சுருண்டது. கருணாரத்னே 52 ரன்களுடன் (84 பந்து, 4 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979–ம் ஆண்டு உலககோப்பையில் அந்த நாட்டு அணிக்கு எதிராக 189 ரன்கள் எடுத்ததே இலங்கையின் குறைந்த ஸ்கோராக இருந்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் சுலப இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் இலங்கையின் பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஷாட் பிட்ச்சாக வீசி பந்துகளை எகிற வைத்த போதிலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. கப்தில் 73 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), முன்ரோ 58 ரன்களுடனும் (47 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

மே 30 அன்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. அதுபோலவே இலங்கிஅயும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

Leave a Response