தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
அதில் முக்கியமானது என்னவென்றால், மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்பது தான். அதாவது இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே புதிய கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும், ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிர்வோர், இந்தி பேசும் மாநிலங்களில் தொடக்கப்பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்குங்கப்பா, எல்லா ஓட்டல்களிலும் வடநாட்டுக்காரன்தான் சப்ளையராக இருக்கான், சட்னி சாம்பார் கூட கேட்டு வாங்கி சாப்பிட முடியல்ல என்று பதிவிட்டு வருகின்றனர்.