மோடி அரசின் புதிய சட்டத்திருத்தம் தோல்வி – பட்டாசு வெடித்த திமுக

2023 ஆம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது.அதன்​படி, நாடாளு​மன்​றம்,சட்​டப்​பேர​வைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும்.மகளிர் இடஒதுக்​கீடுச் சட்​டத்தை
அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை 850 ஆக அதி​கரிக்க ஒன்றிய அரசு திட்​ட​மிட்​டது.

இதற்​காக,அவசரகதியில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக்கூட்​டம் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல்நாளில் மகளிர் இடஒதுக்​கீடுச் சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசனத் திருத்​தம் (131 ஆவது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்​களவையில் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரசு, சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இந்தியா கூட்​டணிக் கட்​சிகள், கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன.

மசோதா மீதான விவாதம் நள்​ளிரவு 1 மணி வரை நீடித்​தது.இந்​நிலை​யில், மக்​களவை​யில் நேற்று காலை விவாதம் தொடர்ந்​தது.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் இராகுல் காந்தி உள்​ளிட்​டோர் பேசினர்.கனி​மொழி,ஆ.இராசா (தி​முக),சசிதரூர், ஜோதி​மணி (காங்​கிரசு), மிதுன் ரெட்டி (ஒய்​எஸ்​ஆர் காங்​கிரசு), ராஜீவ் ரஞ்​சன் சிங் (ஐஜத), கல்​யாண் பானர்ஜி (திரிண​மூல் காங்​கிரசு), ஸ்ரீ கிருஷ்ண தேவ​ராயலு (தெலுங்கு தேசம்), டிம்​பிள் யாதவ் (சமாஜ்​வா​தி), ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேம​மாலினி (பாஜக) உள்​ளிட்ட உறுப்பினர்​கள் மசோ​தாவுக்கு
ஆதர​வாக​வும், எதிர்ப்​பாக​வும் பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்​தனர்.

உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்கு ஒன்றிய அமைச்​சர்​கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பதில் அளித்​தனர்.

இந்த விவாதத்​தில் இராகுல் காந்தி பேசி​ய​தாவது…

இந்​தச்சபை​யில் இன்று சில உண்​மை​கள் உரக்​கச் சொல்​லப்பட வேண்​டும்.தற்​போது கொண்டு வரப்​பட்​டுள்ள மசோதா பெண்​களுக்​கானது அல்ல.இது பெண்​களை முன்​னிறுத்​தி,நாட்​டின் தேர்​தல் வரைபடத்தை மாற்றி
அமைக்​கும் ஒரு தந்​திரமே தவிர வேறொன்​றுமில்​லை.
2023 ஆம் ஆண்டு இதே சபை​யில் நிறைவேற்​றப்​பட்ட மசோ​தாவுக்​கும்,இப்​போது தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள 131 ஆவது அரசி​யலமைப்​புத் திருத்த மசோ​தாவுக்​கும் பெரும் வேறு​பாடு உள்​ளது.2023 மசோ​தாவை இன்​னும் 10
ஆண்​டு​களில் அமல்​படுத்​து​வோம் என்று பாஜக​வினர் கூறினர்.ஆனால், தற்​போதைய மசோதா முற்​றி​லும்
மாறு​பட்​டது.
உண்​மை​யிலேயே பெண்​களுக்கு இடஒதுக்​கீடு அளிக்கவேண்​டும் என்ற எண்​ணம் அரசுக்கு இருந்​தால்,பழைய
மசோ​தாவை உடனடி​யாகக் கொண்டு வாருங்​கள்.அதனை இப்​போதே அமல்​படுத்த எதிர்க்​கட்​சிகள் அனைத்​தும் ஆதரவு அளிப்​போம்.அதைவிடுத்​து,பெண்​களின் பின்​னால் ஒளிந்​து​கொண்டு அரசி​யல் செய்​வது வெட்​கக்​கே​டானது.
தற்​போது கொண்டு வரப்​பட்​டுள்ள இந்த நடவடிக்​கை,சாதி வாரிக் கணக்​கெடுப்​பைத் தவிர்க்​கும் ஒரு முயற்​சி​யாகும். எனது ஓபிசி சகோ​தர,சகோ​தரி​களுக்கு அதி​காரத்தை வழங்​கு​வதற்​குப் பதிலாக,அவர்​களிட​மிருந்து அதைப் பறிக்​கும் முயற்​சியே இது.

இவ்​வாறு இராகுல் பேசி​னார்.

இதற்​கிடையே, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மீதான வாக்​கெடுப்பை முன்​னிட்டு உறுப்பினர்​களுக்கு பிரதமர் மோடி சமூகவலைதளத்​தில் வேண்​டு​கோள் விடுத்​தார். ‘மகளிர் இடஒதுக்​கீடு விசயத்​தில் கடந்த 40 ஆண்​டு​களாக அரசி​யல் செய்​யப்​பட்டு வந்​தது. சுதந்​திரம் பெற்று பல ஆண்​டு​கள் ஆனபிறகும், முடிவு எடுக்​கும் விச​யத்​தில் மகளிருக்கு குறைந்​த​பட்ச பிர​தி​நி​தித்​து​வம்​கூட தரப்​பட​வில்​லை.
இது சரி​யான நடவடிக்கை அல்ல. நாட்​டின் மக்​கள்​தொகை​யில் பாதி​யளவு இருக்​கும் மகளிர் தங்​களது
உரிமை​களைப் பெறவேண்​டிய நேரம் வந்​துள்​ளது.இந்த மசோதா குறித்து பரப்​பப்​படும் தவறான தகவல்​களுக்​கு,
சரி​யான பதில்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன.
உங்​களது தாய், சகோ​தரி, மனை​வி, மகள் ஆகியோரை நினைத்​துப் பார்த்​து,மகளிர் இடஒதுக்​கீடு மசோதா
விசயத்​தில் மனசாட்​சிப்​படி முடிவு எடுக்கவேண்​டும்.மகளிருக்கு அதி​காரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு
கிடைத்​துள்​ளது.எனவே,அவர்​களுக்​கான புதியவாய்ப்​பு​களை பறிக்​காதீர்​கள்.தயவுசெய்து உரிய பரிசீலனை செய்​து, முழுஉணர்​வுடன் முடிவு எடுத்​து,மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவை ஆதரிக்க வேண்​டும் என்று பிரதமர் கேட்டுகொண்டிருந்தார்.

மக்​களவை​யில் மசோதா குறித்து உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பேசியதாவது…..

தமிழ்நாட்டுக்கு தற்​போது 39 எம்​.பி. தொகு​தி​கள் உள்ள நிலை​யில் தொகுதி மறு​வரையறைக்குப் பின்​னர் இந்த
எண்​ணிக்கை 59 ஆக உயரும். இதே​போல, எம்​.பி. தொகு​தி​கள் எண்​ணிக்கை கேரளா​வில் 20 இல் இருந்து 30 ஆகவும், ஆந்​தி​ரா​வில் 25 இல் இருந்து 38 ஆகவும், கர்​நாட​கா​வில் 28 இல் இருந்து 42 ஆகவும் உயரும். தொகுதி மறு​வரையறை​யால் தமிழ்நாட்டுக்கு எந்​த​வித இழப்​பும் ஏற்​ப​டாது. மக்​களவை​யில் தமிழ்நாட்டின் பிர​தி​நி​தித்​து​வம் 7.18 இல் இருந்து 7.23 விழுக்காடாக அதி​கரிக்​கும்.

தொகுதி மறு​வரையறை ஆணை​யத்​தின் அறிக்கை நாடாளு​மன்​றத்​தால் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதல் பெற்ற பிறகே அமல்​படுத்​தப்​படும். 2029 க்கு முன்புவரை தற்​போது இருக்​கும் இடங்​களின்
எண்​ணிக்​கை​யிலேயே அனைத்து தேர்​தல்​களும் நடை​பெறும் என அமித்ஷா பேசி​னார்.

அவர் பேசி முடித்​ததும், மசோதா மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 528 உறுப்பினர்கள் வாக்​களித்​தனர். மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 பேரும், எதி​ராக 230 பேரும் வாக்​களித்​தனர். மசோதா நிறைவேற மூன்​றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்​களவை​யில் 352 உறுப்பினர்களின் ஆதரவு இருந்​தால் மட்​டுமே மசோ​தாவை நிறைவேற்ற முடி​யும்.

ஆனால் 298 பேர் மட்டுமே ஆதர​வாக வாக்​களித்​த​தால் மசோதா தோல்வி அடைந்​தது. நேற்​றைய வாக்​கெடுப்​பின்​போது மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மட்​டுமே வாக்​கெடுப்​புக்கு விடப்​பட்​டது. மற்​ற 2 மசோ​தாக்​கள்​ மீதும்​
வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது….

தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய என்டிஏ. தொகுதி மறுவரையறை கறுப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.
வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன். தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response