
ஈரோடு மாவட்டம்,அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நான்குசாலையில் தவெக பவானி தொகுதி வேட்பாளரை ஆதரித்து கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது….
பவானிசாகரில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு அட்டை பேக்டரி, அந்தியூரிலிருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு எத்தனால் பேக்டரி. இங்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.50 இலட்சம் கோடி சம்பாதிச்சும் உங்களுக்கு (எடப்பாடி) ஆசை தீரவில்லை.
அம்மா மறைவுக்குப் பிறகு நான்தான் முதலமைச்சர் ஆகி இருக்கவேண்டும்.ராத்திரி வரைக்கும் நான்தான். காலையில்தான் மாறிப்போச்சு.ஏன்னா எடப்பாடி கையில் பணப்பெட்டி இருந்தது.என்கையில் பெட்டி இல்லை. காலையில் அந்த அம்மா சசிகலா என்னிடம் கேட்டாங்க.சரி பரவாயில்லை யாரோ ஒருத்தர் இருந்துட்டுப் போறாங்க, கட்சியை உடையாமல் பார்த்துக்கலாம் என்று சொன்னேன்.
காலையில்,அந்த அம்மாவுக்கு தீர்ப்பு உறுதியாகிவிட்டது.நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளர் செங்கோட்டையன் எனக் கூறினார்.
திடீர்னு பார்த்தால் மலைப்பாம்பு மாதிரி வந்து திடீர்னு ஒருத்தர் விழுந்தார்.அப்படியே நீந்திட்டு வந்தார் பாருங்க, நானே பயந்து எழுந்துட்டேன் சேரிலிருந்து.எங்கடா மலைப்பாம்பு எங்கேயோ இங்கே வந்துருச்சாடா,எங்கடா இந்த ரிசார்ட்ல மலைப்பாம்பு இருக்குமாடா?ன்னு நினைச்சேன்.
காலைப் பிடிச்சு கெஞ்சிட்டு,இப்போது, இவர் யார் என்னைக் கொண்டு வருவதற்கு? இவர் யார் என்னை முதலமைச்சர் ஆக்குவதற்கு? எனக்குத் தனித்தகுதி இருக்கு என்கிறார்.இப்படி எவனாவது சொல்லுவானா?
அதுக்கும்மேல, 18 பேர் ஓட்டுப் போட்ட டிடிவியை கழட்டிவிட்டாரு. 11 பேர் ஓட்டு போட்ட ஓபிஎஸ்சையும் கழட்டிவிட்டாரு.இவரை காப்பாத்தின பிஜேபிக்கே திருநெல்வேலி அல்வா கொடுத்துட்டாரு.அதுக்கப்புறம் என்ன பண்ணாருன்னா,பிரேமலதா விஜயகாந்துக்கு ராஜ்யசபா கொடுக்கிறதா கூறி,அவங்களையும் காலி பண்ணிட்டாரு.
அட என்ன பாவம் பண்ணுனாரு அண்ணாமலை? இந்த அண்ணாமலை பிஜேபியிலே இருக்காரு,அவரை நீக்கினால்தான் பிஜேபியுடன் கூட்டணிக்கு நான் வருவேன் என்றார்.
என்னய்யா உலகம் இது? எவனுமே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது,இவர் கொள்ளையடிக்கிறதுக்கு 50 இலட்சம் கோடி கொள்ளையடிச்சு பத்தாதுன்னு இன்னும் 50 இலட்சம் கோடி வேணுங்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில்,எடப்பாடி பழனிச்சாமி 50 இலட்சம் கோடி சம்பாதித்தார் என்று சொல்லியிருப்பது அரசியலரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
