தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி – புதிய கருத்துக்கணிப்பு தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.இந்நிலையில் அக்னி நியூஸ் சர்வீசஸ் (ஏஎன்எஸ்) நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தியது. கருத்துக்கணிப்பு முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களைக் கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்னி நியூஸ் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில் கூறியிருப்பதாவது….

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 56 இடங்களைப் பிடிக்கும்.

மண்டல வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 36 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி அசுரபலத்துடன் உள்ளது.இங்கு அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.மத்திய மண்டலத்தில் 37 இல் 35 இடங்களையும், தென்மண்டலத்தில் 58 இல் 42 இடங்களையும் திமுக கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை மாநிலஅளவில் திமுக கூட்டணி 45.4 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக கூட்டணி 35.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தவெக 11.5 சதவீத வாக்குகளைப் பெறும். சீமானின் நாதக ஒட்டுமொத்தமாக 5.6 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான தரவுகளின்படி, சென்னை (16 தொகுதிகள்), திருவள்ளூர் (10), திருச்சி (9), தஞ்சாவூர் (8), மற்றும் காஞ்சிபுரம் (4) போன்ற மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் வென்று முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தும் எனத் தெரிகிறது.

அதேபோல் நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், இராமநாதபுரம், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் திமுக கூட்டணி 100% இடங்களைக் கைப்பற்றும் என ஆய்வு கூறுகிறது. அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள், நீலகிரி 3 தொகுதிகள், தஞ்சாவூரில் 8 தொகுதிகள், ராமநாதபுரம் 4 தொகுதிகள், அரியலூர் 2 தொகுதிகள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response