
திருப்பூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் திமுக தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் திருப்பூர் ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகே யூனியன்மில் சாலையில் நேற்று நடந்தது. இதில்,மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது….
பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்தது திருப்பூர்.நேற்று இந்தியாவில் மாபெரும் அரசியல் திருப்பம் ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு இங்கு வந்துள்ளேன்.இதைப் பார்க்கும்போது,தமிழ்த் திரைப்பட சூப்பர் ஸ்டார் பாட்டுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அது என்ன பாட்டு தெரியுமா?
என்கிட்ட மோதாதே…நான் ராஜாதி ராஜனடா…என்ற பாட்டுதான் அது.இந்தப் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடுகிறேன்.என்கிட்ட மோதாதே…இது பெரியாரின் தமிழ்நாடு…டா…வம்புக்கு இழுக்காதே…இது அண்ணாவின் கோட்டையடா…இனி,தப்பாட்டம் என்னோடு ஆடாதே….அப்புறமாக குட்டுப்பட்டு ஓடாதே. இதைத்தான் இப்போது தமிழ்நாடு பாடுகிறது.
நாம் பறக்கவிட்ட கறுப்புக்கொடி, பாஜகவின் காவிக் கொடியை வீழ்த்தியுள்ளது.போர் எனறால் வெற்றி ஒன்றுதான் நமது இலக்கு.நாம் வெச்ச குறி தப்பவில்லை.இதுதான் திமுக.இதுதான் தமிழ்நாடு.இதுதான் திராவிட மாடல். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பேராபத்தை 2023 இல் உணர்ந்து,முதன்முதலில் எதிர்க்கத் துவங்கியது திமுகதான்.
இதனால்,பாதிக்கப்பட்ட மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களை அழைத்து, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றினோம். கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்தோம். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி தீர்மானம் போட்டோம். தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அப்போதும்,இரட்டை நாக்கு கொண்ட அதிமுக உள்ளே ஒரு பேச்சு..,வெளியே ஒரு பேச்சு…என பேசியது. பேசினார்கள். இப்போது, மூன்று நாட்களுக்கு முன்பு இந்த மசோதா வரப்போகிறது என தெரிந்தவுடன் நாம் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினோம்.சட்ட நகல் எரித்தோம்.
நாமக்கல்லில் நாம் பற்றவைத்த தீ, நாடு முழுவதும் பரவியது.அந்த வெப்பம் பாராளுமன்றத்தில்,மசோதாவை சாம்பலாக்கியது.
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமித்ஷாவே சொல்லிவிட்டார் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு சிறப்பாகச் செய்யும் என்றார்.
இப்படி, நாடகம் ஆடுவதுடன்,உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.அந்த அடிமைகளிடம் மீண்டும் தமிழ்நாடு சிக்கி விடக்கூடாது.அப்படி சிக்கினால், தமிழ்நாடு…தமிழ்நாடாக இருக்காது. எனவே, இதைத் தடுக்கவேண்டும்.
தமிழ்நாட்டை,அடிமை அதிமுக மற்றும் மதவாத பா.ஜ.க.விடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.அதற்கு ஆதரவு கேட்டுத்தான் இங்கு வந்துள்ளேன்.திமுக அரசின் சாதனைகளை, எடப்பாடி பழனிச்சாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால்,நம் மீது அவதூறு பரப்புகிறார்.அசிங்கமாகப் பேசுகிறார்.சாபம் விடுகிறார்.அவரது சுயநலத்துக்காக தமிழ்நாட்டை காவு கொடுக்கத் துணிந்துவிட்டார்.எனவே, எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ்நாடு 11 ஆவது தோல்வியைக் கொடுக்கவேண்டும்.அவருக்கு,தமிழ்நாடு சரியான பாடம் புகட்டவேண்டும்.
இந்தத் தேர்தலில்,பாசிச பாஜக, அடிமை அதிமுக ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தவேண்டும்.டபுள் இன்ஜின்,டப்பா இன்ஜின்,நமது திட்டங்களை முடக்கவருகிறது.இடஒதுக்கீடு முறையை புதைகுழியில் தள்ளுகிறார்கள்.இதைத்தான் என்டிஏ கூட்டணி,மற்ற மாநிலங்களில் செய்கிறது.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக இருக்கிறார்கள்.இதை தமிழ்நாட்டு மக்கள் உணரவேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்பட ஒன்று சேர்ந்துள்ள என்டிஏ கூட்டணியைப் புறக்கணிக்க வேண்டும்.டெல்லி ஆணவத்துக்குப் பாடம் புகட்டவேண்டும்.
ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களியுங்கள்.தலைநிமிர்ந்த தமிழ்நாடு வளம்பெற,நல்லாட்சி தொடர்ந்திட வெல்வோம் ஒன்றாக. மீண்டும் தமிழ்நாடு வெல்லட்டும்.
இன்று மோடி பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்.நாம்,அவரிடம் பலமுறை கேட்டுள்ளோம் தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்புத் திட்டம் என்ன? எனக் கேட்டுள்ளோம்.ஆனால், அவரிடமிருந்து பதில் இல்லை. இனியும் பதில் வராது.
ஆனால், நாம் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்க்கிறோம் என உண்மைக்குப் புறம்பாக விமர்சனம் செய்கிறார். 2023 இல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவந்தபோது திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் முழுமையாக ஆதரவு தெரிவித்தன.2023 செப்டம்பரில் அந்தச் சட்டம் நிறைவேறியது.அன்றில் இருந்து இன்றுவரை கடந்த 31 மாதங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? இப்போது உங்கள் சுயநலத்துக்காக அந்தச் சட்டத்தை பயன்படுத்தப் பார்த்தீர்கள்.சங் பரிவார் கும்பலுடன் சேர்ந்து, நீங்கள் கூறும் பொய்யை,தமிழ்நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள்.
பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்த மாநிலம் தமிழ்நாடு.பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த கலைஞரின் மகன் நான்.தமிழ்நாட்டின் வெற்றியை, எடப்பாடி பழனிச்சாமி திசை திருப்பிப் பேசுகிறார். தமிழ்நாடு வெற்றிபெறுவதை அந்த அடிமைசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டின் ஒற்றுமையை, நாம் கொண்டாடுகிறோம். நீதிக்காக, கண்ணியத்துக்காக, கூட்டாட்சிக்காக, நெஞ்சுரத்தோடு நின்று கொண்டாடுகிறோம் ஆனால், நீங்கள் பதவி வெறிக்காக பிறந்த தமிழ்மண்ணுக்கு துரோகம் செய்யத் துணிந்தீர்கள். பதவிக்காக தன்மானத்தை அடகு வைத்தீர்கள். பழனிச்சாமியின் பச்சோந்தித்தனம் இனியும் எடுபடாது.
மோடியும், அமித்ஷாவும் இப்போது தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். துணிவு இருந்தால்,மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்று நிறைவேற்றிக் காட்டுங்கள்.முதுகை நிமிர்த்தி கேள்வி கேட்க எடப்பாடி பழனிச்சாமி தயாரா? நாம்,நமது வெற்றியைக் கொண்டாடுவோம்.இதில்,உங்களுக்கு எங்கே எரிகிறது?
என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவை, நீலகிரி மாவட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் திமுக தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு நடந்தது.
அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது….
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்…அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்… இல்லை… தமிழ்நாடு மக்களாகிய உங்களைச் சேரும்… இப்படி நான் மகிழ்ச்சியாகப் பாடும் அளவுக்கு நேற்று மிகப்பெரிய வெற்றிச் செய்தியை நாம் பெற்றுள்ளோம்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்பது முழுக்க முழுக்க பா.ஜ.க என்கிற கட்சிக்குச் சாதகமான சட்டம் என்பதை உணர்ந்து,அந்தச் சட்டத்தை நாம் எதிர்த்தோம்.நம்மைப் போலவே தேசநலன் கருதி பீகாரின் இளம்சிங்கம் தேஜஸ்வி யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் எதிர்த்தனர்.மாநில உரிமைக்காக தங்களது தந்தை வழியில்,முதிர்ச்சியோடு,பக்குவத்தோடு ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்துச் செயல்பட்டனர்.அதற்காக தேஜஸ்வி யாதவ்,அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்பட்டதின் மூலம்,இந்திய அளவில், திமுக ஹீரோ ஆகிவிட்டது.நாம,அமைதியாக நமது தேர்தல் வேலையைப் பார்த்தோம்.ஆனால், நம்மை,தேவையில்லாமல் சீண்டிப் பார்த்தார்கள். நமக்குள் இருந்த பாட்ஷாவை வெளியே கொண்டு வந்துவிட்டார்கள்.1950 களில் இருந்த திமுகவை இப்போது வெளியே வரவைத்து விட்டனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2023 இல் நிறைவேற்றிவிட்டோம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஆனால், இன்று கோவை வந்த அவர், அதற்கு நேர் எதிராகப் பேசி உள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் திமுக தடுத்து நிறுத்திவிட்டது என பொய் பிரசாரம் செய்துள்ளார்.
கோவையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசினார் தெரியுமா? செந்தில் பாலாஜியை கரூர் மக்கள் புறக்கணித்து விட்டனர். அதனால்தான் செந்தில் பாலாஜி கோவைக்கு வந்துள்ளார் எனப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரவில்லை. அவரை நான்தான் கோவைக்கு வரவழைத்தேன். ஏற்கனவே கரூரில் வெற்றி கன்பார்ம் ஆகிவிட்டது. இப்போது கோவையிலும் வெற்றி கன்பார்ம் ஆகிவிட்டது. அதனால்தான் அவருக்கு கோவையில் டியூட்டி போட்டுள்ளேன். செந்தில் பாலாஜி வருகையால், எடப்பாடி பழனிச்சாமி, இப்போது பயந்த சாமியாக இருக்கிறார்.
கோவை அதிமுக கோட்டை என்றார்கள்.உங்கள் கோட்டையில் எப்போதோ நாங்கள் ஓட்டை போட்டுவிட்டோம். கோவையில் இந்தமுறை நாங்கள் ஜெயிப்போம்,நாங்கள்தான் ஜெயிப்போம்.பலபேருக்கு வேட்டு வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு,இந்தமுறை எஸ்.பி.வேலுமணி வேட்டு வைக்கப்போகிறார்.அவர்,உள்ளாட்சித் துறையை ஊழல் துறையாக மாற்றினார்.அரசு காண்ட்ராக்ட் பணிகளை தனது குடும்பத்தினருக்கே கொடுத்தார்.அவர்தான் இம்முறை எடப்பாடி பழனிச்சாமிக்கு வேட்டு வைக்கப் போகிறார்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
