தமிழ்நாடு விவசாயிகளை தடுத்த பாஜக அரசு – உதயநிதி கண்டனம்

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்….

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேகதாது விசயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் நீர்வளத்துறையின் போக்கைக் கண்டித்துத்தான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.

ஆனால்,அவர்கள் ரயிலில் சென்றுகொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்கவைத்து,தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் எனக் கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நம் விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன்,இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெறவேண்டும்.

டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றியஅரசு அனுமதிக்க வேண்டும்.ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தில்லி செல்கிற விவசாயிகளை நடுவிலுள்ள மகாராஷ்டிர காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமென்ன?அவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்தது யார்? மகாராஷ்டிராகாரர்கள் வேறு மாநில காவல்துறையால் தடுக்கப்பட்டால் அதை அம்மாநிலம் ஏற்குமா? எனப்பல்வேறு எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response