
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில்,உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்,5 தொகுதிகளில் இயந்திரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.அதன்படி சென்னை கொளத்தூர்,காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ராஜபாளையம் ஆகிய 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 3 சட்டமன்றத் தேர்தலில் தொடர்வெற்றியை பதிவுப் செய்திருந்தார்.2026 சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவை விட 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.அவரது இந்தத் தோல்வி தமிழக மக்களை மட்டுமல்ல,இந்திய அரசியலையே திரும்பிப்பார்க்க வைத்தது.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்யவேண்டும் என்று தேர்தல்ஆணையத்திடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்திருந்தார்.அவருடைய கோரிக்கையை ஏற்று,தேர்தல் முடிந்த பின்னர் ‘சீல்’ வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜூலை 29 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சரிபார்ப்பில் விவிபாட் இயந்திரங்கள் பழுதானதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இரசீது வழங்கும் கருவிகளின் (வி.வி.பேட்) நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் ஆய்வில்,கொளத்தூர் தொகுதியில் பரிசோதிக்கப்பட்ட இயந்திரங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் கடுமையான கோளாறுகளும்,சீல் வைப்பதில் முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் கடந்த 29 ஆம்தேதி முதல் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.திமுக சட்டத்துறையின் சார்பில் திமுக தலைவரின் அனுமதி பெற்று, தமிழ்நாட்டில் மொத்தம் 5 தொகுதிகளுக்கு ஆய்வு கோரப்பட்டது.தற்போது கொளத்தூர்,காஞ்சிபுரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய 3 தொகுதிகளில் இந்த சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராஜபாளையத்தில் இதுவரை 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரத்தில் 10 இயந்திரங்களைச் சரிபார்க்க கோரியிருந்தோம்.அதில் நேற்று முன்தினம் ஆய்வு செய்யப்பட்ட ஒரு இயந்திரத்தில் ரசீது வழங்கும் கருவி வேலை செய்யவில்லை.அத்துடன் வாக்கினைப் பதிவுசெய்யும் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் வாக்களிக்கும் கருவி ஆகிய இரண்டும் சரியாக இயங்கவில்லை.கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 14 இயந்திரங்களை சரிபார்க்கக் கேட்டிருந்தோம்.கடந்த 29 ஆம்தேதி 2 இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன, அதில் பிரச்னைகள் இல்லை.ஜூலை 30 ஆம்தேதி எடுக்கப்பட்ட 2 இயந்திரங்களில், ஒரு இயந்திரத்தின் இரசீது வழங்கும் கருவி இயங்காததால் ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டு,தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வேறொரு வாக்குச்சாவடி இயந்திரம் ஆய்வு செய்யப்பட்டது.
ஜூலை 31 ஆம்தேதியும் ஒரு இரசீது வழங்கும் கருவி வேலை செய்யவில்லை.இதுவரை மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் (சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்கள்) பழுதுபட்டும், சரியாக இயங்காமலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நேற்று காலை வாக்குச்சாவடி எண் 157க்குரிய இயந்திரங்களைச் சரிபார்க்க எடுத்தபோது மிகப்பெரிய குளறுபடி வெளிச்சத்திற்கு வந்தது.கொளத்தூர் தொகுதியில் 36 வேட்பாளர்கள் போட்டியிட்டதால்,ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்களிக்கும் கருவிகள், 1 கட்டுப்பாட்டுப் பிரிவு என மொத்தம் 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.ஒவ்வொரு இயந்திரத்தின் இருபக்கங்களிலும் உள்ள தாழ்ப்பாளில் முகவரி அட்டைகள் கட்டப்பட்டு,அதில் வாக்குச்சாவடி எண்,தொகுதி பெயர், அதிகாரி கையெழுத்து ஆகியவை இடம்பெறவேண்டும்.
ஆனால்,வாக்குச்சாவடி 157ன் 4 இயந்திரங்களிலும் இருந்த 7 முகவரி அட்டைகளும் எந்த விவரமும் எழுதப்படாமல்,காலியாக,புத்தம்புதிய அட்டைகளாக ஒட்டப்பட்டிருந்தன.எழுதப்பட்ட விவரங்கள் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக முகவரி அட்டையின் பின்புறம்தான் அரக்கு முத்திரை வைக்கவேண்டும். ஆனால்,இங்கு விவரங்களே எழுதப்படாத காலியான அட்டையின் முன்பக்கத்தில் அரக்கு முத்திரை வைக்கப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கையின்போது கட்டுப்பாட்டுப் பிரிவு ஒருமுறை திறக்கப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட வேண்டும். எனவே கட்டுப்பாட்டுப் பிரிவில் 2 அரக்கு முத்திரைகள் இருக்கவேண்டும்.ஆனால்,அந்த 2 முத்திரைகளும் அங்கு இல்லை.இதைப்பற்றித் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது,இது ‘மனித தவறு’ என்று அற்பத்தனமாக பதிலளிக்கிறார்கள்.இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை என்பதும், தேர்தலில் பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பதும் அறிவியல் பூர்வமாகவும் சட்டரீதியாகவும் நிரூபணமாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஜூலை 30 ஆம் தேதியே விரிவான புகார் மனு அளிக்கப்பட்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்களிடம் பதில் பெறுவதற்காக 19 முக்கிய கேள்விகளுடன் புகார் மனு அளித்துள்ளோம்.அதற்குப் பதில் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.29 ஆம்தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த ஆய்வுப்பணிகள் முழுவதும் காணொலி பதிவு செய்யப்பட்டுள்ளன.சரியான முகவரி அட்டையே இல்லாத 157 ஆவது வாக்குச்சாவடி இயந்திரத்தைப் பத்திரமாகப் பூட்டிவைக்கவேண்டும் என்றும், நீதிமன்றத்தில் இது முக்கியச் சான்றாக தேவைப்படும் என்றும் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.
இந்த ஆய்வு காணொலிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்.நகல்கள் கிடைத்தவுடன்,திமுக தலைவரின் ஒப்புதலோடு,இந்தச் சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தையோ அல்லது உச்சநீதிமன்றத்தையோ நாடி உரிய சட்டப்போராட்டம் தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோவனின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.


