எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 20) அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….
கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் நடைபெற்ற நிர்வாகக் குளறுபடிகள் சரிசெய்யப்படும் என ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
மின்வாரியத்தில் நன்றாக உழைக்கக்கூடிய அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால், 1 இலட்சத்து 59 ஆயிரம் கோடி இழப்புக்கு, வட்டி செலுத்தும் அளவுக்கு மின்வாரியம் உள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணம், சரியான வழியில் பயன்படுத்தப்பட்டு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மின்வாரியத்தில் இவ்வளவு பெரிய தவறுகள் நடந்திருப்பதால், கடந்த அதிமுக அரசை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது.
மோசமான நிர்வாகத்திலிருந்து மின்வாரியத்தை மீட்டெடுத்து, வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுக்கும்.
3,000 மில்லியன் யூனிட் பயன்படுத்தி, மின்வாரியத்துக்குச் செலுத்திய கட்டணத்தைவிட, 4,400 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டு, கூடுதலாக ரூ.80 கோடிதான் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கூடுதல் வைப்புத்தொகை வேண்டாம் என முதல்வர் உத்தரவு வழங்கி, இந்த ஆண்டு அந்தத் தொகை வசூலிக்கப்படவில்லை. இதனால், கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு குறித்து குறிப்பிட்டுச் சொன்னால், நேரடி கள ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும்.
94987 94987 என்ற மின் நுகர்வோருக்கான சேவை மையத்துக்குத் தொடர்புகொண்டு மின் கட்டணம் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.