ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் துணைச் செயலர் செங்கோட்டையன் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது….
25 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது. பெட்ரோல் குண்டுகளுடன் வந்த சில மர்மநபர்கள் ராஜ்பவன் பிரதான நுழைவுவாயில் வழியாக நுழைய முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்ததால். அவர்களால் ராஜ்பவனுக்குள் உள்ளே நுழைய முடியவில்லை. ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரிகள் உசாராக இருந்ததால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் ராஜ்பவனின் பிரதான நுழைவுவாயில் எண்.1 இல் முதல் குண்டு வீசப்பட்டது. பெரிய சத்தத்துடன் வெடித்தது. அதனையடுத்து அந்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ராஜ்பவன் பிரதான நுழைவுவாயில் பகுதி சேதம் அடைந்தது.
கடந்த பல மாதங்களாக ஆளுநரின் மீது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் தொடர்ந்து வாய்மொழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வாய்மொழித் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக் கூட்டங்களிலும், அவர்களுடைய சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்கள் ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டப் பணிகளைச் செய்யவிடாமல் அவரைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருக்கின்றன. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும், பலன் இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி கவர்னர் தர்மபுரம் ஆதீனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது, தடியடி மற்றும் கற்களால் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக ராஜ்பவன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. தாக்கியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கவர்னரின் உயிருக்குப் பொது மிரட்டல் விடுக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் உண்மையாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை. மாறாக தீவிரமான இந்தச் சம்பவங்களைச் சிறிய குற்றங்களாக மாற்றியது. கவர்னருக்கு எதிராக வாய்மொழித் தாக்குதல்கள் மற்றும் உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் எனத் தொடர்ந்து, தற்போது வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்திருப்பதன் மூலம் மாநிலத்தின் உயர்ந்த அரசியல் அமைப்பு அதிகாரத்தில் இருக்கும் கவர்னரின் பாதுகாப்பு சீர்குலைந்து போய் இருப்பதைக் காட்டுகிறது.
கவர்னரை அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வெட்கக்கேடான வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தீவிரமாக ஆராய்ந்து. இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் கீழ் கவர்னரால் பணியாற்ற முடியாது. எனவே இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு. முறையான விசாரணை மேற்கொண்டு, தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் கவர்னருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை கூறியுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 124 கூறுவதென்ன?
எவரேனும் இந்திய குடியரசுத்தலைவர், அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநரின் சட்டபூர்வ அதிகாரங்களில் ஏதாவதொன்றை ஏதாவதொரு முறையில் பயன்படுத்துவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு அத்தகைய குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரைத் தூண்டும் அல்லது கட்டாயப்படுத்தும் உள்நோக்கத்துடன், அத்தகைய குடியரசுத் தலைவரை அல்லது ஆளுநரைத் தாக்கினால் அல்லது முறையின்றித் தடுத்தால் அல்லது முறையின்றி தடுப்பதற்கு முயன்றால் அல்லது குற்றமுறு பலப்பிரயோக வழிகளால் அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதலால் பணிய வைத்தால் அல்லது அவ்வாறாக பணியவைக்க முயன்றால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.