மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
அனைத்துத் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முழுமையாக சேவையாற்றுவேன். அரசுத் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பேன்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தொழில் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முன்னிலையில் உள்ளது. இங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடி பட்டு நூற்பாலைகள், பட்டுக்கூடு ஏல மையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வெண்பட்டு உற்பத்தியை அதிகரிக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சேலத்தில் பட்டுவளர்ச்சித் துறை இயக்குநராக பணியாற்றிய இவர் தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். 2001-ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் துணை ஆட்சியராக பொறுப்பேற்ற இவர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கோட்டாட்சியராகவும், கோவை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது தனி அலுவலராகவும் இவர் பொறுப்பு வகித்தார். தற்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கிறார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஆணையம்பட்டி கிராமம்.



