பாஜக அரசின் திட்டத்துக்கு சந்திரபாபு எழுத்துப்பூர்வ எதிர்ப்பு – தில்லி பரபரப்பு

பீகார் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் மிகப்பெரிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்தனர்.

அப்போது,பீகாரில் இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த வேண்டாம். வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையானது குடியுரிமை சரிபார்ப்புடன் தொடர்புடையது இல்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை பிரதிநிதிகள் குழு வலியுறுத்தி உள்ளது. கோரிக்கைகள் அடங்கிய மனுவும் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

பீகாரில் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இந்தத் திருத்தம் மேற்கொண்டிருப்பது பாஜக அல்லாத மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழ்ச்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன.

இப்போது அந்த வரிசையில் ஆளும் பாஜக கூட்டணியிலுள்ள சந்திரபாபுவின் தெலுங்குதேசம் கட்சியும் சேர்ந்திருப்பது தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்திருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.இது பாஜகவின் சூழ்ச்சித் திட்டத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

Leave a Response