விஜய் அரசின் தமிழ் புறக்கணிப்பு – கி.வெ கண்டனம்

தமிழில் குடமுழுக்கு கோரிய தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது
தமிழ்நாடு அரசின் காட்டுமிராண்டி தாக்குதல் – கைது நடவடிக்கைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தமிழ் வளர்த்த மதுரை – மீனாட்சி அம்மன் கோயிலில்,நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி,தெய்வத்தமிழ்ப் பேரவையினர் 12.9.2026 காலை ஆர்ப்பாட்டம் நடத்த கூடியபோது,அவர்கள் மீது பாய்ந்த காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர்.

இது சட்டவழியிலான சனநாயக உரிமைப் பறிப்பு மட்டுமின்றி,தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான கொடிய தீண்டாமை ஆகும்.இதனைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில்,வரும் 17.9.2026 அன்று குடமுழுக்கு நடக்க இருக்கிறது.இதை ஒட்டிய வேள்விச்சாலை பூசைகளும்,பிற வழிபாட்டு நிகழ்வுகளும் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடந்து வருகின்றன.

இத்திருக்கோயில் குடமுழுக்கை வேள்விச்சாலை, கோபுரக் கலசம்,கருவறை ஆகிய மூன்றிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி, தெய்வத்தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினரும், சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார் தொடுத்த வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மேற்சொன்ன 3 இடங்களிலும் சமற்கிருதத்திற்கு இணையாக தமிழ்மந்திரங்கள் அக்கம் பக்கமாக ஓதி,மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் என 24-8-2026 அன்று ஆணையிட்டது ((W.P. No. 33101 of 2026).

இதற்கு முன்னர்,தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டது போலவே,இப்போது ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசும் நீதிமன்றத் தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழையும் தமிழரையும் புறக்கணித்து உள்ளது.

பெயருக்கு ஒரு ஓரத்தில் ஒன்றிரண்டு வேள்விக் குண்டத்தில் தமிழ்மந்திரங்களை அனுமதித்துவிட்டு முழுக்கமுழுக்க சமற்கிருதத்திலேயே வேள்வி மற்றும் குடமுழுக்கு வழிபாடுகளை சமற்கிருதத்திலேயே நடத்திக் கொண்டிருக்கிறது.

தீர்ப்பு நகலைக் காட்டி அதன்படி வேள்விச்சாலை, கோபுரக் கலசம்,கருவறை ஆகிய மூன்று இடங்களிலும் சமற்கிருத மந்திரங்களுக்கு இணையாக சமநிலையில் தமிழ் மந்திரங்களும் ஓதப்படவேண்டும்;தமிழ் அர்ச்சகர்கள் இந்நிகழ்வுகளில் இடம்பெறவேண்டும் என தெய்வத்தமிழ்ப் பேரவையின் பொறுப்பாளர்கள் குச்சனூர்க்கிழார், சிம்மம் சத்தியபாமா,கதிர்நிலவன்உள்ளிட்டோர் வலியுறுத்திக் கேட்டபின்பும்,தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகமப்படி சமற்கிருதத்தில்தான் கலசம் கருவறை பூசைகள் முழுக்க முழுக்க நடைபெறும்.வேள்விச்சாலையில் ஒன்றிரண்டு தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிவிட்டனர்.

இதனைக் கண்டித்து மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கை நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்றும்,தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் அன்றாட வழிபாடும் குடமுழுக்கு போன்ற சிறப்பு நிகழ்வுகளும் தமிழில் நடைபெறுவதை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்தியும் இன்று (12-9-2026) காலை 10.00 மணிக்கு,மதுரை பெத்தானியாபுரம் குரு திரையரங்கம் எதிரில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை தெய்வத்தமிழ்ப் பேரவை அறிவித்தது.

முதலில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய மதுரை மாநகர காவல்துறை கடைசிநேரத்தில், அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்தது.

திட்டமிட்டபடி,ஒன்றுகூடிய தெய்வத்தமிழ்பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்க தோழர்களை ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே,கைது செய்ய முனைந்தது.இதனைத் தட்டிக்கேட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைப்பொதுச்செயலாளர்,வழக்கறிஞர் கோ.மாரிமுத்து அவர்களை காவல்துறை அதிகாரிகள் தரதரவென இழுத்துச் சென்றனர்.அடாவடியாக அறுபதுக்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஐயா குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி,இராசயோக சித்தர் பீடம்,குச்சனூர்,தேனி மாவட்டம்) தலைமை தாங்கினார்.ஐயா சித்தர் மூங்கிலடியார்(தலைவர் – இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்),சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – தமிழ்வேத ஆகமப் பாடசாலை,மேச்சேரி,சேலம்), திரு. வே.பூ.இராமராசு (செயற்குழு உறுப்பினர்,தெய்வத் தமிழ்ப் பேரவை),திரு.க.முருகன் (துணைத்தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்),ததேபே துணைப்பொதுச்செயலாளர்கள் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து,க.அருணபாரதி,ததேபே தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ.இராசேந்திரன்,நா.வைகறை, பி.தென்னவன்,திருச்சி இலக்குவன்,குடந்தை விடுதலைச்சுடர்,மூ.த.கவித்துவன்,க.தீந்தமிழன், மதுரை க.கதிர்நிலவன் உள்ளிட்ட திரளானோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மீனாட்சி அம்மன் திருக்கோயில் தொடர்பாக இப்போது சத்தியபாமா அம்மையார் வழக்கு தீர்ப்பு மட்டுமின்றி இதற்கு முன்னர்,வேறு திருக்கோயில்களில், சமற்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களும் திருக்குடமுழுக்கு வழிபாடுகளில் இடம்பெறவேண்டும் என அளிக்கப்பட்ட தீர்ப்புகளும் ஆட்சியாளர்களால் குப்பைக் கூடையில் வீசப்பட்டன!

இதற்கு முன்பாக, 2015 இறுதியில்,ஆதிசைவ சிவாச்சாரியார் நலச்சங்கம் எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கில்,நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு,“ஆகமங்கள் எதுவும் இன்ன சாதியினர்தான் அர்ச்சனை செய்யவேண்டும் என்றோ, இந்த மொழியில் மட்டும்தான் வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறவேண்டும் என்றோ,நிபந்தனை விதிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு மதநூல்கள் ஏதாவது ஒன்றில் சொல்லப்பட்டிருந்தாலும்,இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சியே எல்லா இடங்களிலும் செயல்படவேண்டும்.எந்தப் புனிதநூலின் பெயராலும் உயர்வு-தாழ்வு கூறுவதோ,புறக்கணிப்புகள் செய்வதோ, தீண்டாமைக்கு நிகரான குற்றச்செயலாகும்”என வலியுறுத்தி தீர்ப்புரைத்தது.

இந்தநிலையில்,ஆகமவிதிகள் என எதையோ ஒன்றைக் கூறி,நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு ஆரிய பிராமணியத்திற்கு இதற்கு முன்னர் திராவிடமாடல் தி.மு.க. அரசு அடிபணிந்து வேலை செய்தது.அதேபாதையில்,சமூகநீதி அரசு எனச் சொல்லிக்கொள்ளும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசும் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான தீண்டாமையைக் கொஞ்சமும் கூச்சிமின்றிச் செயல்படுத்துகிறது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி,தமிழுக்குச் சமநீதி கேட்டு அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அடாவடியாக அடக்குமுறையை ஏவுகிறது.

விஜய் அரசின் இந்த அப்பட்டமான தமிழ்ப் புறக்கணிப்பையும்,தமிழர் புறக்கணிப்பையும் சட்டத்திற்குப் புறம்பான அடக்குமுறையையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.கைது செய்யப்பட்டுள்ள தெய்வத்தமிழ்ப் பேரவை,மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response