ஓசூர் சந்திரசூடேசுவரர் குடமுழுக்கை தமிழில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ச.க.வினர் கொலைவெறித் தாக்குதல்,காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
ஓசூரில் அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயிலின் இராசகோபுர குடமுழக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரிய தெய்வத் தமிழ்ப் பேரவையினர் மீது ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வினர் இன்று (27.6.2023) மாலை கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர் சுப்பிரமணியன் கடுமையாகக் காயம்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களும் கற்களாலும், கையாலும் தாக்கப்பட்டுள்ளனர். அக்கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகத்திற்குள் புகுந்து அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். பூவரசன் என்ற அறநிலையத்துறை அதிகாரி தாக்கப்பட்டவர்களில் ஒருவர்.
ஓசூரில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயிலின் இராசகோபுர குடமுழுக்கு நாளை 28.06.2023 காலை நடைபெறவுள்ளது. அதனை சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ் மற்றும் சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தும்படி தெய்வத் தமிழ்ப் பேரவையினர் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கான வேண்டுகோள் மனுவை, கடந்த 26.06.2023 அன்று, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து அவர்களும், மற்றவர்களும், திருக்கோயிலின் செயல் அலுவலர் அவர்களிடம் நேரில் கொடுத்தனர். அத்துடன் இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் திரு. சுதர்சன் மற்றும் துணை ஆணையர் திருவாட்டி. ஜோதிலட்சுமி ஆகியோரிடம் இக்கோரிக்கையை திரு. மாரிமுத்து கொண்டு சென்றார்.
இதனையடுத்து, இன்று (27.06.2023) திருக்கோயிலின் நிர்வாக அலுவலகத்தில் திருக்கோயிலின் செயல் அலுவலர் திரு. சாமிதுரை, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் திரு. பூவரசன், திரு. சக்தி ஆகியோர் தலைமையில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, இரா. முருகப்பெருமாள், சுப்பிரமணியன், வனமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இப்பேச்சுவார்த்தையில், திருக்கோயிலின் கோபுரக் கலசம் – வேள்விச்சாலை – கருவறை ஆகிய மூன்று இடங்களிலும் சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகம், இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தது.
இந்நிலையில், குடமுழுக்கைத் தமிழில் நடத்துவதற்கு உதவும் வகையில், தமிழில் கிரியைகள் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்ளும் சிவனடியார்களின் பட்டியலை திருக்கோயில் நிர்வாகத்திடம் நேரில் வழங்கிட – மாலை 4 மணியளவில், தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார் (மேச்சேரி) தலைமையிலான அடியார்கள், திருக்கோயிலுக்கு நேரில் வருகை தந்து, குடமுழுக்கு ஏற்பாடுகளைப் பார்வையிட்டுவிட்டு, நிர்வாக அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
குடமுழுக்கை சமற்கிருதத்திலும், தமிழிலும் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோயிலின் அர்ச்சகர்கள் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்களைச் சேர்ந்தோருக்கு இதுகுறித்துத் தகவல் தந்துள்ளனர். அர்ச்சகர்களின் தூண்டுதலின் பேரில் அங்கு திபுதிபுவென வந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரத்தினர் அங்கிருந்த அரசு அதிகாரிகளையும், தெய்வத் தமிழ்ப் பேரவையினரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். கற்களை எடுத்து எறிந்தனர். நாற்காலிகளைத் தூக்கி வீசினர். கோயில் அதிகாரி பூவரசனை பிடித்துத் தள்ளினர். உயிர்தப்பிக்க ஒதுங்கி வந்தவர்கள் மீதும் கற்களை எறிந்து தாக்கினர். சத்தியபாமா அம்மையாரின் மகிழுந்து கண்ணாடி மீது கற்கள் வீசி உடைத்தனர்.
இதில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் சுப்பிரமணியன் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். மற்றும் சிலருக்கு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கொடுங்காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்திய இந்த வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நாளை காலை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படியும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டபடியும், தமிழ் – சமற்கிருதம் இரண்டிலும் வேள்விச்சாலை பூசை – கோபுரக் கலச பூசை – கருவறை பூசை அனைத்தையும் நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.