புதுச்சேரியில் இரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசு, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுக்கும் பாஜக, புதுச்சேரியில் கூட்டணிக் கட்சியையும் விட்டுவைக்கவில்லை.
இதற்குச் சான்றாக வந்துள்ள செய்தி….
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரசு, பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இரங்கசாமி உள்ளார். இருந்தும் அவரால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. புதிதாகத் திட்டங்கள் அறிவித்தால், அதற்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் கொடுக்க மறுக்கிறார். அதே நேரத்தில் தலைமைச் செயலாளர் ஒரு பக்கம் அதிகாரிகளை தன் கைக்குள் போட்டுக் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் தனிக்காட்டு ராஜாவாகச் செயல்பட்டு வருகிறார். இதனால், புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி நடக்கிறது? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரியை ஒன்றிய அரசு ஆட்டிப் படைத்து வருவதாக முதல்வர் இரங்கசாமியே கண்ணீர் விட்டுப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அங்கு, அரசு ஊழியர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களைக் கேட்டு முதல்வர் இரங்கசாமி வீட்டை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.
வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத காட்சி புதுச்சேரியில் நடந்து வருகிறது.
இங்கு பாஜ பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலைவிரித்து வருகிறது.
முதல்வர் இரங்கசாமி நலத்திட்டங்களைச் செய்தால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்குமென நினைத்து ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும், ஆளுநர் மூலம் மசோதாவை நிறைவேற்றாமலும் அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் கொரோனா நேரத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 250 க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டனர்.
பணி நிரந்தரம் கோரி முதல்வர் இரங்கசாமியைச் சந்திக்க நூற்றுக்கணக்கான செவிலியர்கள் நேற்று புதுச்சேரி சட்டமன்றம் அருகே திரண்டனர். அவர்களை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, முதலமைச்சருடன் பேச அழைத்துச் சென்றார். அவர்கள் முதல்வரிடம், ‘உயிரைப் பணயம் வைத்து, கொரோனா நேரத்தில் மக்களுக்காகப் பணியாற்றினோம். தற்போது மூன்று மாதத்துக்கு ஒருமுறை நீட்டிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிதாகத் தேர்வு செய்யவுள்ள செவிலியர் பணியிடங்களில் எங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்’ என்றனர்.
அப்போது அவர்களிடம் முதல்வர் கூறுகையில், ‘இங்கு 18 ஆண்டுகளாகப் பணி புரிந்தோருக்கே என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. இதனை உங்களிடம் சொல்வதற்கு அசிங்கமாகத்தான் உள்ளது. இந்த முதல்வர் இருக்கையில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம்? என்று எண்ணுகிறேன். அப்படியே எழுந்து பின்பக்கமாக வெளியே சென்று விடலாம் போல் உள்ளது. முதல்வர் சொன்னால் முன்பெல்லாம் நடைபெறும். இப்போது அதுபோல் செய்ய முடியாது. விழாவுக்குச் சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. பல அதிகாரிகள் விஆர்எஸ் தரக்கூறுகிறார்கள். மின்துறையில் விடுப்பு எடுத்து சென்றுவிட்டனர். எனவே பொறுத்திருங்கள். புதிதாக ஆட்கள் எடுத்தால், கொரோனா காலத்தில் நீங்கள் பணிபுரிந்ததற்காக வெயிட்டேஜ் செய்கிறோம். அதுதான் செய்ய முடியும். அதிகாரம் என் கையில் இருந்தால் செய்து விடுவேன். அது முடியவில்லை’ என்று விரக்தியுடன் பதிலளித்தார்.
முதல்வர் இரங்கசாமி இவ்வாறு புலம்பக் காரணம் இருக்கிறது.
இங்கு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது. இதற்காக என்.ஆர்.காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவிரித்து வருகிறது.
முதல்வர் இரங்கசாமி நலத்திட்டங்களைச் செய்தால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்குமென நினைத்து ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும், ஆளுநர் மூலம் மசோதாவை நிறைவேற்றாமலும் அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனாலேயே அவர் இவ்வாறு புலம்பியுள்ளார்.