
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது….
தவெக அரசு,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தயவால் உள்ளது.இது நிலையில்லாத ஆட்சி.இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்.மக்களைப் பற்றிச் சிந்திக்காத அரசாங்கம் இது.மக்கள் பிரச்னைகளை பற்றி கவலை கொள்ளாமல்,புதிய தலைமைச்செயலகம் அமைப்பதிலேயே குறியாகச் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக,திமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளோம்.எப்போது ஆட்சி செய்தாலும்,மக்களுக்குத் தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.ஆனால்,இன்றைய ஆட்சியாளர்கள் தன்னுடைய நலனுக்கு மட்டுமே செயல்படுகின்றனர்.
அண்மையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வந்தபோது,வழிநெடுகிலும் பேரிகார்டு அமைக்க ரூ.4.50 கோடி செலவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.இந்த அணையே அந்தக்காலத்தில் ரூ.4.50 கோடியில்தான் கட்டப்பட்டுள்ளது.கட்சி தொடங்கியே 3 வருடம்தான் ஆகிறது.ஆனால்,அதிமுகவைப் பார்த்து தீர்ந்துபோன கட்சி என்று சொல்கின்றனர்.நான் கிராமத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவன்.மக்களுக்கு என்ன பிரச்னை என்று உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டவன்.
தற்போதைய சட்டமன்ற நிதிநிலை அறிக்கையிலும் சரி,மானியக் கோரிக்கையிலும் சரி,சேலம் மாவட்டத்திற்கு எந்தத் திட்டமும் வரவில்லை.தமிழகம் முழுவதும் எந்தவொரு பெரிய திட்டமும் வரவில்லை.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மாதிரி,பல கட்சிக்குச் சென்று வந்தவர்கள் நாங்கள் இல்லை. அவர் திமுகவில் இருந்தார்,பின்னர் விசிகவுக்குப் போனார்.பின்னர்,என்னிடம் வந்து அதிமுகவில்
துணைப்பொதுச் செயலாளர் பதவி வேண்டும் எனக் கேட்டார்.அப்போது,அதிமுகவில் கட்சிப் பதவிகளை விற்பனை செய்வதில்லை.உழைப்பவர்களுக்குத்தான் பதவி கிடைக்கும் என்று கூறினோம்.அதனால்,தவெகவிற்கு சென்று, பின்னர் அந்தக் கட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்.இப்படி பல கட்சி மாறிய ஆதவ் அர்ஜூனாவுக்கு, அதிமுக பற்றிப் பேசத் தகுதியில்லை.எந்தக் கட்சியிலும் நிலைத்து இருக்காத அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,ஒரு வேடந்தாங்கல் பறவையாக உள்ளார்.
கரூரில் தவெக தேர்தல் பிரசார கூட்டத்தில்,41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.அவர்களைப் பார்க்கக்கூடப் போகவில்லை.பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லவில்லை.கட்சி அலுவலகத்தை 15 நாட்களுக்கு மூடிவிட்டுச் சென்றுவிட்டனர்.வீரவசனம் பேசினவர் வௌிமாநிலத்திற்குச் சென்று பதுங்கிவிட்டார்.அப்படி வீரம் மிக்கவர்கள்தான் தவெகவினர்.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.விசாரணை முடிந்தால்,யார் எங்கெங்கு இருப்பார்கள் என்று தெரியாது.இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.அது முழுமையாக வந்தால்,இந்த அரசாங்கம் இருக்குமா என்று தெரியாது
மூன்று வருடங்களுக்கு முன் கட்சி ஆரம்பித்த தவெக,இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடவில்லை.மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று,ஆட்சிக்கு வந்தபிறகு மக்களை மறந்த கட்சிதான் தவெக.
டெங்குவை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மின்வெட்டுக்கு பதிலாக மின்பற்றாக்குறை என்று அமைச்சர் கூறுகிறார்.சுமார் 2500 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது.மக்கள் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.இதற்கு முன்பு ஒரு யூனிட் ரூ.18க்கு மேல் வாங்கவில்லை.ஆனால் தற்போது ஒரு யூனிட் ரூ.30க்கு வாங்கப்படுகிறது.இப்போது அரசு அலுவலகங்களில் டிமாண்ட் செய்து இலஞ்சம் வாங்கும் சூழல் உள்ளது.
முதல்வர் விஜய் இலண்டனில் ரூ.15,300 கோடி முதலீட்டை ஈர்த்ததாகக் கூறுகின்றனர்.இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.தவெக ஆட்சிக்கு வந்தவுடன்,நிறைய திட்டங்களை கொடுப்போம் எனக் கூறினர். ஆனால்,எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை.
தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது.எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை உள்ளது.முன்பெல்லாம் அனுபவமுள்ள,திறமையுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள்.தவெகவில் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்தான் ஆலோசகர்களாக உள்ளனர்.தவெக அரசுக்கு இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.


