
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து,எல்லாக்கட்சி வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு,அனல்பறக்கும் பரப்புரை நடைபெற்று வருகிறது.
இந்தத்தேர்தலில் தவெக, திமுக,அதிமுக,நாம் தமிழர்,கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தல் பரப்புரைக்காக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தவெக வெளியிட்டிருந்தது.இதற்கு திமுக,அதிமுக,பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.பிறகட்சிகளின்
தலைவர்கள் எப்படி தவெக நட்சத்திர பேச்சாளர்களாக மாறினர் என கேள்வி எழுப்பியிருந்தனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர்,
தவெகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை இரத்து செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார்
தெரிவித்திருந்தனர்.இந்நிலையில்,கூட்டணிக்கட்சித் தலைவர்களான காதர் மொய்தீன்,மாணிக்கம் தாகூர்,வைகோ,துரை வைகோ,திருமாவளவன்,ரவிக்குமார்,சிந்தனைச் செல்வன் ஆகியோர் பெயர்களை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து தவெக நீக்கியுள்ளது.
திருமாவளவன் உள்ளிட்டோர் தவெக கூட்டணியில் இருக்கிறார்கள்.அதனால் அந்தக்கட்சி அவர்களை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சேர்த்திருக்கிறது.இதிலென்ன தப்பு இருக்கு? இதற்கு ஏன் மற்றகட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என விஜய் கட்சியினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவின் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை இதற்கு விடையளிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது….
நினைத்து நினைத்துப் பெயர்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் என்பது தவெக கட்சியின் உள்கட்சி அறிவிப்பு அல்ல. R.P. Act, 1951 – Section 77(1), Explanation 1 & Explanation 2 மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
Section 77(1), Explanation 2-ன் proviso படி,பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் இறந்தாலோ அல்லது அந்த அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாமல் போனாலோ,அவருக்குப் பதிலாக மற்றொரு பெயரைச் சேர்ப்பது தொடர்பான சிறப்பு விதி உள்ளது.
மேலும்,நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் அறிவிக்கை வெளியான 7 நாட்களுக்குள் ECI மற்றும் சம்பந்தப்பட்ட CEO-விடம் தெரிவிக்கப்பட வேண்டும்.முறையாகத் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கே Section 77-ன் சிறப்பு செலவுக் கணக்கு விதிகள் பொருந்தும்.
வைகோ,திருமாவளவன்,மாணிக்கம் தாகூர் போன்றோரை தவெக கட்சி தனது Star Campaigner பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ள நிலையில்,அவர்கள் தவெக வேட்பாளர்களுக்காக மதுராந்தகம்,தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தால்,Section 77-ன் Star Campaigner செலவு விலக்கு அவர்களுக்குப் பொருந்தாது.
எனவே,அந்தப் பிரசாரத்துடன் தொடர்புடைய செலவுகள் Section 77 மற்றும் ECI-யின் expenditure-monitoring விதிகளின்படி சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள முக்கிய சட்டநிலை.
சட்டம் பேசட்டும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைப்படித்தாவது இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றனவா? என்பதை விஜய் கட்சியினர் தெரிந்துகொள்ளட்டும் என பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


