பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்படி கருவறை – வேள்விச் சாலை – கோபுரக்கலசத்தில் தமிழ் ஒலிக்கும் என அறிவிக்காமல் ஓதுவார்களை வைத்து ஏமாற்றும் சூழ்ச்சியே நடக்கிறது என பழனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அது குறித்த விவரம்….
தமிழ்க் கடவுள் பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டுமேன தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, பழனி பேருந்து நிலையம் அருகிலுள்ள மயில் சதுக்கத்தில் (ரவுண்டானா) தெய்வத் தமிழ்ப் பேரவை நேற்று (20.01.2023) காலை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அந்த ஆர்ப்பாட்டத்திற்கு,19.01.2023 இரவு தடை விதிப்பதாகக் காவல்துறையினர் அறிவித்த நிலையிலும், கூட்டம் கூட்டமாக ஆன்மிகப் பெருமக்களும், தமிழின உணர்வாளர்களும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார் (அரசயோகி கருவூறார் பதினெண் சித்தர் பீடம்), தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் (சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனர்), தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், வீரத்தமிழர் முன்னணி தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் துரை.செந்தில்நாதன்,சு.முருகேசன், நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் சிவசங்கரன், பழனி தொகுதி பொறுப்பாளர் கரு.சிவபாலன், கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், பாட்டாளி மக்கள் கட்சி திண்டுக்கல் மாவட்டத் தலைவர் (வடக்கு) அ.வைரமுத்து, ஆசீவக சமய நடுவ நிறுவனர் முனைவர் கொ.ச.ஆசீவக சுடரொளி, வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் க.இராசமாணிக்கம், பேராசிரியர் சௌ.காமராசு (மேற்குத் தொடர்ச்சி மலை வெள்ளியங்கிரி மலைப் பாதுகாப்புச் சங்கம்), புதிய தலைமுறை மக்கள் கட்சி நிறுவனர் பா.கோபாலகிருட்டிணன், தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் இமயம் சரவணன், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சிவ.வடிவேலன் (சென்னை), வே.பூ.இராமராசு (திருச்சி), வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் (புதுச்சேரி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த பெ.மணியரசன் பேசியதாவது…..
”தன்னைத் திட்டுவதென்றால் கூடத் தமிழில் திட்டுக என்று முருகன் சொன்னதாக அருணகிரிநாதர் பாடினார். “மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்; முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்!” என்கிறது கந்தரலங்காரம்.
இவ்வாறான தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்துங்கள் என வேண்டுகோள் வைத்துப் போராடும் அவலநிலையில் தான் நாம் நிற்கிறோம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு 2020 பிப்ரவரி 5 அன்று நடந்தபோது, அதனைத் தமிழ்வழியில் நடத்த ஆணை இடக்கோரி நடந்த வழக்கிலும் (W.P (M.D) No. 1644 of 2020), கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த ஆணையிடக் கோரிய வழக்கிலும் (W.P. (M.D). No. 0017750/2020) – கருவறை – வேள்விச் சாலை – கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் சொல்லி, குடமுழுக்கு வழிபாடு நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டது. இந்த இரண்டு திருக்கோயில்களிலும் கலச நீராட்டல் உள்ளிட்ட குடமுழுக்கு வழிபாடுகள் தமிழிலும் நடந்தன. தெய்வத் தமிழ்ப் பேரவையினரின் முயற்சியால் விராலிமலை முருகன் கோயில் குடமுழுக்கிலும், விருத்தாச்சலம் பழமலைநாதர் (விருத்தகிரீசுவரர்) கோயில் குடமுழுக்கிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி வழிபாட்டுக் கிரியைகள் நடந்தன.
ஆனால், இந்த நீதிமன்ற ஆணைகளைத் தானாகச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
கடந்த 23.01.2022 அன்று சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற வடபழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கில், தமிழ் புறக்கணிக்கப்பட்டு, சமற்கிருதம் மட்டுமே ஓதப்பட்டது. எனவே, பழனி குடமுழுக்கிலும் தமிழ்நாடு அரசு இதே போக்கைக் கடைபிடிக்கலாம் என்ற நிலையில், தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களை 21.12.2022 அன்று நேரில் சந்தித்து முறையிடப்பட்டது. பழனி குடமுழுக்கில் தமிழ் ஒலிக்கும் என உறுதியாகச் சொல்ல அவர் மறுத்து விட்டார்.
இந்நிலையில், நேற்று (19.01.2023), பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் தொடுத்த வழக்கில், தமிழ் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு பொத்தாம் பொதுவாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், நேற்று (19.01.2023) மதியம், பழனியிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உதவி ஆணையர் திருமதி. இலட்சுமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். அவர் பேசியதிலிருந்து, தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு வெளியே நிறுத்தி, ஒலிப்பெருக்கியில் தமிழ்ப் பாடல்களைப் பாட வைப்பதற்கான முயற்சி நடப்பதை அறிந்தோம். பிராமணரல்லாத தமிழர்களை கருவறையில் அனுமதிக்க முடியாதே என நேரடியாகவே தெரிவித்த அவர், தமிழ் மந்திரங்கள் கூறி கிரியைகளை நடத்துவோரை வேள்விச்சாலையில் அனுமதிப்பது குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்றுதான் கூறினார். நீதிமன்றத்தீர்ப்பின்படி கருவறை – கலசம் – வேள்விச்சாலை ஆகிய இடங்களில் தமிழ் மொழி உறுதியாகப் பயன்படுத்தப்படும் என அவரும் உறுதி கூறவில்லை.
இந்நிலையில்தான், இந்த வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு கூட ஒலிப்பெருக்கி வைத்துக் கொள்ளவோ, துணிப்பந்தல் – நாற்காலி போட்டுக் கொள்ளவோ அனுமதி மறுத்துள்ளது தமிழ்நாடு அரசு! தமிழ் வேண்டும் எனக் கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா?
பொத்தாம் பொதுவில் தமிழ் பயன்படுத்தப்படும் எனக்கூறிவிட்டு, தமிழ் ஓதுவார்களை கருவறைக்கு வெளியே தமிழில் ஒலிபெருக்கியில் பாடவிட்டு ஏமாற்றாமல், தமிழ்நாடு அரசு உறுதியாக முடிவெடுத்து பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் முதலிய இடங்களில் தமிழ் மந்திர அர்ச்சனையை உறுதி செய்ய வேண்டும்.
குடமுழுக்கிற்காக மொத்தம் 90 வேள்வி குண்டங்கள் போடப்பட்டுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவற்றில் 45 குண்டங்களை தமிழில் மந்திரங்கள் கூறி கிரியை நடத்துவோருக்குத்தான் தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். கோபுரக் கலசத்தில் நன்னீராட்டு நடைபெறும்போது, தமிழர்கள் கோபுரத்தில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழில் மந்திரம் கூறும் அர்ச்சகர்களை அமர்த்த வேண்டும். அதேபோல, குடமுழுக்கின் முன்பும் பின்பும் தமிழில் மந்திரங்கள் கூறும் அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தமிழ் பாதி – சமற்கிருதம் பாதி நடைபெறுவதுதான் நீதிமன்றத் தீர்ப்பே தவிர, தமிழில் அழைப்பிதழ் அச்சடிப்பதோ, ஓதுவார்களை வெளியில் நிறுத்திப் பாடுவதோ அல்ல!”.
இவ்வாறு பெ.மணியரசன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில், சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமையில் தமிழ் மந்திர வழிபாடும், சித்தர் மூங்கிலடியார் தலைமையில் பால்குட ஊர்வலம் மற்றும் வழிபாடும் நடைபெற்று, கூடியிருந்தோரிடையே உணர்வெழுச்சியை உண்டாக்கியது. ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் – குழந்தைகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.