திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் “விண்ணைத் தொட கனவு காணுங்கள்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியரசு கலந்து கொண்டு கலாம் பேசியது:
“அறிவு உன்னை மகான் ஆக்கும்’ என்ற தலைப்பில் நான் உங்களுடன் உரையாற்ற உள்ளேன். அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி.
பகைவராலும் அழிக்க முடியாத கோட்டை. எத்தகைய சூழ்நிலையிலும் கோட்டை போல் நம்மை அறிவு காக்கும். கற்றல் கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி சிந்திக்கும் திறனைத் தூண்டுகிறது. சிந்தனை அறிவை வளர்க்கிறது. அறிவு உன்னை மகான் ஆக்குகிறது.
வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்துவது திருக்குறள்தான். இதில் அறிவு சார்ந்த பல பொருள்கள் உள்ளன. அறிவு என்பது மூன்று சமன்பாடுகளை உள்ளடக்கியதாகும். அறிவென்பது கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. கற்பனை சக்தி உருவாகுவதற்கு குடும்பம், பள்ளி சூழ்நிலைகள் முக்கிய காரணமாகின்றன. உள்ளம் உறுதி இளைய சமுதாயத்தின் ஆணிவேராகும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறிய லட்சியம் பெரிய குற்றமாகும்.


