தமிழ்நாட்டில் ரூ.6805 கோடி ரூபாய்க்கு மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பொது அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் நேற்று வெளியிட்டிருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் மிகப்பெரிய அளவில் மின் கட்டணத்தை உயர்த்துவது மக்கள் மீதான இரக்கமற்ற, அரக்கத்தனமான தாக்குதலாகும்.
வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு யூனிட்டுக்கு 85 காசு வரையிலும், வணிகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.72 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி மாதம் 500 யூனிட்டுகள் பயன்படுத்தும் குடும்பத்தினர் இரு மாதங்களுக்கு ரூ.5430 செலுத்த வேண்டும். இது முந்தைய கட்டணத்தை விட ரூ.715 அதிமாகும். இந்த அளவுக்கு கூடுதல் சுமையை மக்களால் தாங்க முடியாது. தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் மின்வெட்டால் சிறு, குறு தொழில்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தொழிற்துறைக்கான மின்வெட்டு அதிகரிக்கப்பட்டிருப்பதும், மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதும் இத்தகைய நிறுவனங்கள் அடியோடு மூடப்படுவதற்கே வழிவகுக்கும்.
மின்கட்டண உயர்வு தொடர்பாக விளக்கமளித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, மின்கட்டண உயர்வு அறிவிப்புக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி தன்னிச்சையாக இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது மக்களை முட்டாள்களாக கருதி ஏமாற்றும் செயலாகும். மின்கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மனுவை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார வாரியமே தாக்கல் செய்ய வேண்டும்; இந்தக் கெடு முடிந்து ஒரு மாதத்திற்குள் கட்டண மாற்றத்திற்கான கோரிக்கை மின் வாரியத்திடமிருந்து வரவில்லை என்றால், ஒழுங்குமுறை ஆணையமே மின்கட்டண உயர்வுக்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கவேண்டும் என விதிகளைக் காட்டி ஜெயலலிதா கூறியுள்ளார்.
உண்மையிலேயே ஒழுங்குமுறை ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டிருந்தால், நவம்பர் மாதத்திற்குள் கட்டண உயர்வுக்கான மனுவை மின்சார வாரியம் தாக்கல் செய்யாத நிலையில், ஒரு மாத அவகாசம் முடிந்து, கடந்த ஜனவரி மாதத்திலேயே கட்டண உயர்வுக்கான பொது அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். மாறாக 2014&15 ஆம் நிதியாண்டில் பாதி கழிந்த சூழலில், மக்களவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கிவிட்ட நிலையில் இப்போது பொது அறிவிப்பை வெளியிட்டிருப்பதிலிருந்தே, இவையெல்லாம் யாருடைய விருப்பப்படி நடைபெறுகின்றன என்பதை பாமர மக்கள் கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும். கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகளை வாங்கிய பின்னர் பால்விலை, மின்கட்டணம், பேரூந்து கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய ஜெயலலிதா, இப்போதும் மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிய பின் மின்கட்டணத்தை உயர்த்தி தமது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மின்னுற்பத்திச் செலவு, மின்வாரியத்தின் கடனுக்கான வட்டி ஆகிய செலவுகளை சமாளிக்கவே மின்கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓராண்டு இழப்பு ரூ.10,950 கோடியாகவும், ஒட்டுமொத்த இழப்பு ரூ.38,000 கோடியாகவும், கடன் ரூ.40,300 கோடியாகவும் இருந்தது. 17.11.2011 அன்று சுமார் ரூ.10,000 கோடிக்கு மின்கட்டண உயர்வை அறிவித்த ஜெயலலிதா, வெகுவிரைவில் மின்வாரியத்தின் கடன்கள் அடைக்கப்பட்டு லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படுத்தப்படும் என்றார். ஆனால், ஆண்டுக்கு ரூ.10,000க்கும் கூடுதலாகவே மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரிய ஆண்டு இழப்பு குறையவேயில்லை. அதுமட்டுமின்றி, மின்வாரியத்தின் மொத்தஇழப்பும், மொத்தக்கடனும் தலா ரூ.60,000 கோடியை தாண்டி விட்டன. இதுதான் ஜெயலலிதா அரசு படைத்த சாதனையாகும்.
நிர்வாகத்தை மேம்படுத்தி, ஊழலை ஒழித்திருந்தால் நிச்சயமாக மின்வாரியத்தின் கடனை அடைத்து லாபத்தில் இயங்க வைத்திருக்க முடியும். ஆனால், நிர்வாகத் திறமையின்மையும், ஊழலும் தலைவிரித்து ஆடுவது தான் மின்வாரியத்தின் அவல நிலைக்கு காரணமாகும். மின்வெட்டை போக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.26,000 கோடிக்கு வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்குகிறது. இதில் மட்டும் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி முதல் ரூ.6,000 கோடி வரை ஊழல் செய்யப்படுவதாக குற்றச்சாற்றுகள் கூறப்படுகின்றன. மின்திட்டங்களை தாமதப்படுத்தியதற்காக அவற்றை ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனங்களிடமிருந்து ரூ.7418 கோடி இழப்பீடு வசூலித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்த அளவுக்கு நிர்வாக ஓட்டைகள் மற்றும் ஊழல்கள் தலைவிரித்தாடுவது தான் மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் எனும்போது, அதை சரி செய்யாமல் பொது மக்கள் மீது மின்கட்டண உயர்வு என்ற சுமையை சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
மின்கட்டண உயர்வுக்கான பொது அறிவிப்பை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள போதிலும், ஏழை மக்கள் பாதிக்காத வகையில் கூடுதல் மானியத்தை மின்சார வாரியத்திற்கு அரசு வழங்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இது ஒட்டகத்தின் முதுகில் டன் கணக்கில் சுமையை அதற்கு தெரியாமல் ஏற்றிவிட்டு, சுமையை தாங்க முடியாமல் ஒட்டகம் தடுமாறும்போது அதன் கண்ணெதிரே சில கிலோ எடையுள்ள சரக்குகளை மட்டும் இறக்கி ஏமாற்றும் உத்தியைச் சேர்ந்தது தான் முதலமைச்சரின் அறிவிப்பும் ஆகும். ரூ.6805 கோடிக்கு மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு ஒருசில கோடியை மட்டும் மானியமாக வழங்குவதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும்.


