திருப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக்கல்லூரி – சத்யபாமா எம்.பி கோரிக்கை

திருப்பூரில் பேச்சு மற்றும் செவிப்புலன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக கல்லூரி ஒன்றை தொடங்க வலியுறுத்தியுள்ளார் திருப்பூர் தொகுதி எம்.பி சத்தியபாமா.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் அவர் பேசியிருப்பதாவது….

சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்து சாத்தியமான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருவது குறித்து அறிந்து மகிழ்ச்சி.

பேச்சு மற்றும் செவிப்புலன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தங்கள் மேற்படிப்பைத் தொடரும் வகையில் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவுவது குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

அத்தகைய மாற்றுத்திறனாளிகள் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில்வதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக சில பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

ஆனால் மேற்படிப்பு படிக்க அவர்களுக்கென்று எந்தக் கல்வி நிறுவனமும் பிரத்யேகமாக இல்லை. அவர்கள் தற்சார்பு பெறும் வகையில் மேற்படிப்பு படிக்க முடியாமல் சமூகத்தில் ஒரு சுமையாக இன்னமும் கருதப்படுகின்றனர்.

மேற்படிப்பு பயில முடியாத காரணத்தால் அவர்களின் திறமைகளும் வீணடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மேற்கத்திய மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் சுமார் 145000 பேர் பதிவுபெற்றுள்ளனர்.

அதே போன்று சம எண்ணிக்கையில் அரசிடம் பதிவு செய்துகொள்ளாத மாற்றுத்திறனாளிகளும் இருக்கக்கூடும். இவர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் பேச்சு மற்றும் செவிப்புலன் குறைபாடுடையவர்கள். இவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு கல்லூரி அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டியது அவசியமாகும்.

பேச்சு மற்றும் செவிப்புலன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான அலி ஜாவர் ஜங் தேசிய கல்வி நிறுவனத்தின் ஆதரவில் ஒரு சிறப்புக்கல்லூரியை பேச்சு மற்றும் செவிப்புலன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் விரைவில் அமைக்கவேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நல்ல பணிக்காக சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Response