நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 18,850 ஜவுளி நிறுவனங்கள் நேற்று முதல் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.475 கோடியளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்னைகளை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது….
தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக, இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.
தற்போதுள்ள நிலைமை மற்றும் தமிழ்நாட்டின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. இருந்தபோதும், நிலைமை சீரடையாத காரணத்தால், பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழல் தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்குப் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவைகள் மற்றும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வாங்குபவருக்கு வழங்குவதற்கான ஒப்புக் கொள்ளப்பட்ட விலைக்கு இடையே விலை பொருந்தாததால் மூடப்படும் அபாயத்தை எதிர் கொண்டு வருகிறது.
தொழில் துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி எமக்குக் கவலையளிக்கிறது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, விலைவாசி உயர்வையும், அதன் விளைவாக ஏற்படும் இடையூறுகளையும் கட்டுப்படுத்திட பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
அதாவது, உடனடி நடவடிக்கையாக பருத்தி மற்றும் நூலுக்கான இருப்பு தொடர்பான அறிவிப்பினை அனைத்து நூற்பாலைகளுக்கும் கட்டாயமாக்கலாம். இதன்மூலம் பருத்தி வியாபாரிகள் பருத்தி மற்றும் நூல் கிடைப்பது குறித்த உண்மையான தரவுகளைப் பெற முடியும்.
ஒன்றிய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் 30, 2022 வரை தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு சரக்குகள் இந்தியத் துறைமுகங்களை வந்தடைய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், இறக்குமதி வரி விலக்கு 2022, ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். எனவே, செப்டம்பர் 30 வரை உள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெளிவான விளக்கங்களை வழங்கலாம்.
தற்போது, நூற்பாலைகளுக்கு பருத்தி வாங்குவதற்காக ரொக்கக் கடன் வரம்பை 3 மாதங்களுக்கு மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன.இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பருத்தி கொள்முதல் செய்வதற்கான நூற்பாலைகளின் ரொக்கக் கடன் வரம்பினை ஓராண்டில், 8 மாதங்கள் வரை நீட்டிக்கலாம். இதேபோல், வங்கிகள் வாங்கும் மதிப்பில் 25 விழுக்காடாக உள்ள விளிம்புத் தொகை 10 விழுக்காடாகக் குறைக்கலாம். ஏனெனில், வங்கிகள் வாங்கும் பங்கு மதிப்பை சந்தையில் உண்மையான கொள்முதல், சந்தை விகிதங்களை விட குறைவான விலையில் கணக்கிடுகின்றன. இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்விசயத்தில் உடனடியாகத் தலையிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.