தமிழினத்துக்கு ஆபத்து எதிர்கொள்ள நாம் தமிழராய் இணைவோம் – கி.வெங்கட்ராமன் அழைப்பு

பொருளியலில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று (23.01.2019) மாலை – நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறைவுரையாற்றினார்.

கி. வெங்கட்ராமன் தலைமை உரையின் எழுத்து வடிவம்….

“அருமைத் தோழர் சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கங்கள்! எனக்கு முன்பாக பேசியவர்கள் அனைவரும் இட ஒதுக்கீடு குறித்த வரலாற்றையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

ஆனால், இப்போது வந்துள்ள இப்புதியச் சிக்கலில் நாம் சிலவற்றை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது நமது கடமை! இந்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த 10 விழுக்காட்டு இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது, இடஒதுக்கீட்டுக்கு கோட்பாட்டளவில் என்ன ஆபத்தை விளைவிக்கப் போகிறது, அரசியலில் இது எப்படி பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது, இதைத் தீர்க்க வழி என்ன என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கெனவே இராசீவ் காந்தி காலத்திலும், பின்னர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலும் கொண்டு வரப்பட்டதைப் போல், சில மாநிலங்களில் கொண்டு வரப்பட்டதைப் போல் – ஆதிக்க சாதியினர்க்கு இட ஒதுக்கீடு வழங்கும் தனிச்சட்டம் இப்போது கொண்டு வரப்படவில்லை. “சட்டத்தின் ஆட்சி” செயல்பட்டு – தனிச்சட்டங்களை, அரசாணைகளை நீதிமன்றங்கள் தூக்கியெறிந்து விடக்கூடும் என்பதை உணர்ந்து கொண்ட மோடி, இப்போது அரசமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்துதான் இந்த இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்கிறார். மிகவும் சிக்கலான விடயம் இது!

அரசமைப்புச் சட்டத்தின் 124ஆவது திருத்தம் என்றுதான் முதலில் கொண்டு வந்தார்கள். பின்னர், பல குழுக்களுக்கு அனுப்பிய பிறகு, இறுதியாக 103ஆவது திருத்தமாக அது ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இப்போது அரசிதழிலும் அது வெளிவந்துவிட்டது.

இந்தியா முழுவதற்கும் உள்ள ஆதிக்க சாதியினரிடம் ஓட்டு வாங்குவதற்காகத்தான் பா.ச.க. அரசு, அவசர அவசரமாக இந்த 10% இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியதாக எல்லோரும் தெரிவிக்கிறார்கள். பா.ச.க. கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை காங்கிரசு, கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்துப் பேசினாலும், அச்சட்டத்த ஆதரித்து வாக்களித்தார்கள். லல்லு பிரசாத்தின் இராஷ்ட்ரீய சனதா தளமும், பிஜூ சனதா தளமும் மட்டும்தான் இச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்தன. மாயாவதி, முலாயம் சிங் ஆகியோர் இச்சட்டத்தை ஆதரித்தினர். எனவே, இதற்குப் பின்னால் உள்ள இன அரசியலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே பாதிக்கப்படுவது வெறும் சமூகநீதி மட்டுமல்ல – இன நீதி பாதிக்கப்படுகிறது; தமிழினத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது! தமிழ்நாட்டிற்கு இந்தச் சட்டத்தைப் பொருத்திப் பார்த்தால், இந்த 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தால் இந்தியாவிலேயே மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகப்போவது தமிழினம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

“பொதுப் பட்டியலில்” ஆதிக்கசாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என்று வெளியே சொல்லுகிறார்களே தவிர, சட்டத்தில் அப்படி அவர்கள் நேரடியாக எழுதவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15இன் உட்பிரிவு 4 – 5இன் கீழ் அரசு – தனியார் – தன்நிதி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் சாதிப் பட்டியலில் “இடம்பெறாத சாதிகளில்” 8 இலட்சம் ரூபாய்க்கும் கீழ் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்குத்தான் இந்த 10% இட ஒதுக்கீடு என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், இந்த 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை வழங்குகிறார்கள்.
பொதுப் பட்டியலில், அந்தப் பொதுப் போட்டிக்குத் தகுதியான தாழ்த்தப்பட்டவர்கள் போட்டியிட்டு வர முடியும்; பிற்படுத்தப்பட்ட – மிக பிற்படுத்தப்பட்டவர்கள் போட்டியிட்டு வர முடியும். இந்த உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

மண்டல் குழு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கணக்கிட தனி ஆய்வு மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் ஏற்கெனவே விரிவான ஆய்வு நடத்தி பட்டியல் அணியம் செய்யப்பட்டிருந்தது. எனவே, அப்பட்டியல் அப்படியே ஏற்கப்பட்டது.

இப்போது அப்பட்டியலில் வராத சாதியினர் எனும்போது, தமிழ்நாட்டில் 3 விழுக்காடு உள்ள பிராமணர்களும், 1 விழுக்காடு உள்ள இதர பிராமணர் அல்லாத சாதிப் பிரிவுகளும்தான் – இந்திய அரசு வழங்கியுள்ள இந்த 10% இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள் ஆவர். அதாவது, தமிழ்நாட்டில் வெறும் 3% உள்ள சாதியினர்க்கும் 10% இடத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்! போட்டியே இல்லாமல் ஆதிக்க சாதியினர்க்கு மூன்று மடங்கு இடத்தைக் கொடுத்து விடுகிறார்கள். அதுவும் இல்லாமல், பொதுப்போட்டிக்கு உள்ள மீதமுள்ள 21 விழுக்காட்டு இடங்களிலும் அவர்கள் வந்துவிடுவார்கள்! எவ்வளவு பெரிய அநீதி இது?

உத்திரப்பிரதேசத்தில் 20 விழுக்காட்டு ஆதிக்க சாதியினர் இருப்பதால் மாயாவதி அதை ஆதரித்தார். அது அவர்களது சிக்கல்! ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவின் பெயரால் தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது! இதை எப்படி ஏற்க முடியும்? தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் இச்சட்டம் செயலுக்கு வரும்போது தமிழர்களின் நிலை என்னவாகும்?

இடஒதுக்கீடு நீண்டகாலமாக செயலில் இருக்கும் தமிழ்நாட்டில், 69 விழுக்காட்டு இடஒதுக்கீடு செயலில் இருக்கும் தமிழ்நாட்டில் – இப்போதும்கூட தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதே உண்மை!

மண்டல் குழு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பதவியிலும் எந்தெந்த வகுப்பினர் இருக்கின்றனர் எனக் கணக்கெடுத்துச் சொன்னது. தொடர்வண்டித் துறைப் பணிகளில் “கலாசி” போன்ற கீழ்நிலை வேலைகளில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். மேலே செல்ல செல்ல அவர்களது பிரதிநிதித்துவம் இல்லை! அச்சமூகத்தின் முழுமையான மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்கள் பிரதிநிதித்துவம் பெறவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளாவிலும் இதே நிலைதான்!

இந்த உண்மைகளெல்லாம் வெளிப்பட்டுவிடும் என்பதால்தான், கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பட்டியலை அப்போது ஆண்ட காங்கிரசுக் கட்சியும் வெளியிடவில்லை; இப்போது வந்துள்ள பா.ச.க.வும் வெளியிடவில்லை!

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள 10% இட ஒதுக்கீட்டுக்கு பா.ச.க. அரசு இப்படி ஏதாவதொரு ஆய்வை மேற்கொண்டதா? இல்லை!

தமிழ்நாட்டில் 3 விழுக்காட்டு பார்ப்பனர்கள் மட்டுமின்றி, 1 விழுக்காடு உள்ள பிற சாதிப் பிரிவினர் இருக்கின்றார்கள் அல்லவா, அவர்களும் பார்ப்பனர்களுடன் போட்டி போட்டிக் கொண்டு வரமுடியாது; வரமுடியவில்லை! எனவே, ஒட்டுமொத்தமாக பொதுப்பட்டியலை முழுவதுமாக தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழ் மக்களிடமிருந்து பிரித்து, ஆரிய பிராமணர்களுக்கு வழங்கும் ஏற்பாடு இது! எனவே, இது பொதுவான சமூகநீதிப் பிரச்சினை அல்ல – தமிழினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இன அநீதி!

வரலாற்றுக் காலந்தொட்டு ஆரியத்தை எதிர்த்து – வர்ணாசிரமத்தை எதிர்த்து – சாதியை எதிர்த்துக் களமாடிய மண் தமிழ் மண்! அறத்தால் சூழப்பட்டு – அறத்தால் ஆளப்பட்ட மண்ணாக நம் தமிழ் மண் விளங்கியது. நாம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தமிழர் அறம் பேசினோம். ஆரியர்களோ, தலையில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன் என வர்ணாசிரமம் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த வர்ணாசிரம தர்மம் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் நிலைபெறத் தொடங்கியது.

இப்போது இந்தியத்தின் பெயரால் நம் மீது மீண்டும் வர்ணாசிரமத் திணிப்பு நடந்துள்ளது. வெறும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை அல்ல இது – தமிழினத்தின் மீதான ஆரியத்தின் தாக்குதல்!

இந்த 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டு சட்டத்தால், தமிழ்நாட்டில் தனது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என பா.ச.க. கவலைப்படவில்லை. ஏனெனில், அவர்களுக்கு வாக்கு வாங்கித் தர ஸ்டாலின்களும், இராமதாசுகளும் இருக்கின்றனர் என்ற துணிவு அவர்களுக்கு இருக்கிறது!

இப்போது வந்துள்ள இந்த 10% இட ஒதுக்கீட்டு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் நோக்கவுரையில் ஒரு மோசடியைச் அரங்கேற்றி இருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 46இன்படி தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களில் பொருளியலில் பின்தங்கி “நலிந்தவர்”களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யலாம் என்கிறது. (Article 46 – The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation). அதன்படியே அரசு சார்பில் பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், இப்போது வந்துள்ள 10% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் இதை அப்படியே மாற்றி “பொருளியலில் பின்தங்கியவர்கள்” (Economic weaker sections) என்று குறிப்பிட்டுள்ளார்கள். Economic Interest of the weaker sections – நலிந்த பிரிவினரின் பொருளியல் நலன்கள் என்பது வேறு, பொருளியலில் பின்தங்கியவர்கள் என்பது வேறு! மிக நுணுக்கமான வேறுபாடு என்றாலும், இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டுக்கே அழிவை ஏற்படுத்தக்கூடிய சொற்றொடர் இது! வெறும் 10 விழுக்காட்டுச் சிக்கல் அல்ல இது – ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் காலி செய்யும் ஏற்பாடு இது!

இந்தச் சட்டம் நாளை உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுவிட்டால், இதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக சமூக வாரியாக அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டையே தூக்கியெறிந்துவிட்டு, வெறும் பொருளியல் அளவுகோலை வைத்து இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டையே தகர்த்து விடுவார்கள். இப்போதுள்ள சமூக அளவுகோலை முற்றிலுமாகத் தூக்கிவிட்டு, நாளை எல்லாவற்றிலும் பொருளியல் அளவுகோலை கொண்டு வந்துவிடுவார்கள். வரலாற்று வகையில் ஒதுக்கப் பட்டவர்களுக்கு கிடைத்து வரும் சமூகநீதியை அப்படியே காலி செய்து விடுவார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற பொதுவான அறிவாளர்கள் மத்தியில் பேசியபோது, “இசுலாமியர்களை – கிறித்தவர்களை சிறுபான்மையினர்” என்று அழைக்கக் கூடாது எனப் பேசினார். நாமும் இதையேதான் சொல்கிறோம். ஆனால், அவரது கூற்றுக்கும் நமது கூற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இசுலாமியர்கள் – கிறித்தவர்கள் மீதான ஆரிய ஒடுக்குமுறைகள் அப்படியேதான் இருக்கும், ஆனால் அவர்கள் தங்கள் பெயரை மட்டும் “சிறுபான்மையினர்” என அழைத்துக் கொள்ளக்கூடாது என்பதே மோகன் பகவத்தின் கூற்று!

இதைத்தான் இந்த 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டின் வழியே செயல்படுத்தி இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பதையே காலி செய்வதற்காகத்தான், இந்த புதிய 10% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

மாநிலங்களவையில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் தம்மை ஆதரிக்கும் என்ற துணிவில்தான் பா.ச.க. இந்த 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. சி.பி.எம். கட்சியின் டி.கே. ரங்கராசன் நேரடியாக அச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார். சி.பி.ஐ.யின் து. இராசா, தேர்வுக்குழுவுக்கு சட்டத்தை அனுப்பக் கோரிவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார். இரண்டும் பா.ச.க.வுக்கு பலனைத்தான் அளித்தது.

மண்டல் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவராமல் கசிந்து வந்து ஏடுகளில் விவாதிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளியலில் பின்தங்கியுள்ள ஆதிக்க சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென சி.பி.எம்.மின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியது. அப்போது, சி.பி.எம்.மிலிருந்து தோழர் பெ. மணியரசன், நான் உள்ளிட்டோர் அதை எதிர்த்துக் கடுமையாக வாதாடினோம். நம் சொந்த வாழ்வில் சாதியைப் புறக்கணித்து வாழ வேண்டும் என்பது சரி; ஆனால், வெளியிலேயே நீடிக்கும் சாதி ஆதிக்கத்தைப் புறக்கணிக்கிறேன் என்றால், அது நீடிப்பதற்கு உதவி செய்வதாகப் பொருள்! அதைத்தான் சி.பி.எம். செய்கிறது.

தமிழ்நாட்டில், கேரளாவில், கர்நாடகத்தில் செயல்படுகின்ற பா.ச.க., காங்கிரசு, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தமக்கு ஓட்டுப் போனால்கூட பரவாயில்லை – அவற்றுக்கு மேலானது இந்தியம் என்று இக்கட்சிகள் கருதுகின்றன. தான் எவ்வளவு பணிந்து செயல்பட்டாலும் மாயாவதிக்கும், முலாயம் சிங்குக்கும் பிராமணர்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். அது அவர்களுக்கும் தெரியும்! ஆனாலும், இச்சட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். எதற்காக? இன அரசியலும், வர்ணசாதி அரசியலும் இணைந்துள்ள இந்தப் புள்ளியை இயக்குவதுதான் இந்தியம்!

காவியும், சிகப்பும், கதரும் ஒரே அணிவகுப்பில் நிற்கிறார்கள்! மாயாவதியும் முலாயம் சிங்கும் அந்த அணிவகுப்பில் நிற்கிறார்கள். இந்த அணிவகுப்பின் திரைமறைவு என்ன? இந்தியம் என்பதே அந்தத் திரைமறைவு! இந்தியம் என்பதான் பெயரால் எல்லாவற்றையும் இவர்களால் செய்ய முடியும்! ஏனெனில், இந்தியம் என்பது ஆரியம்தான்! இந்துத்துவம் எனப் பேசுகிறபோது அது வெளிப்படையானது; இந்தியம் எனப் பேசுகிறபோது அது திரைமறைவானது! காவி கட்டி வருகிறபோது வெளிப்படையானது; கதர் கட்டி வருகிறபோது திரைமறைவானது! அவ்வளவுதான்! எனவே, இது வெறும் ஓட்டு வாங்குவதற்கான ஏற்பாடு அல்ல!

அரசியல் தளத்தில் மட்டுமல்ல, சமூகத்தளத்திலும் இதன் பாதிப்புகள் இருக்கின்றன. இன்றைக்கு சாதிகளே கட்சிகளாக மாறிக் கொண்டுள்ள நிலையில், சாதாரண காதல் திருமணங்கள்கூட கலவரங்களாக மாற்றப்படுகின்றன. சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் இதற்கு முன் நடைபெற்று வந்தாலும்கூட, அவையெல்லாம் இரு குடும்பங்களுக்கு இடையிலான சண்டையாக இருந்தது. ஆனால், இப்போது அது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பகையாக வளர்த்தெடுக்கப்படுகின்றது.

இதன் அடுத்த கட்டமாக இப்போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு அணிதிரட்டல் நடைபெறுகின்றது. அதன் விளைவாக, இதுவரை பிராமணர்கள் பேசி வந்த வர்ணாசிரமக் கருத்துகளை பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் பேசுகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால்தான் அவர்கள் முன்னேறி, “கூலிங்கிளாஸ்” போட்டுக் கொண்டு இப்படிச் செய்வதாக அவர்களில் சிலர் எதிர்க்கின்றனர். இடஒதுக்கீட்டுக்காகப் போராடியவர்களே இப்படி பேசுவது வருத்தமளிக்கிறது.

இப்போது, இடஒதுக்கீட்டுக்கே மிகப்பெரும் ஆபத்து வந்துள்ள நிலையிலும் கூட தமிழ்நாட்டில் பலரும் அமைதி காப்பது ஆபத்தானது! அந்த அமைதியை நாம் தமிழர் கட்சி உடைத்திருக்கிறது; அவர்களுக்கு நமது பாராட்டுகள்! அதிலும், பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாசு வாக்கெடுப்பைப் புறக்கணித்திருப்பது மிகவும் ஆபத்தானது!

ஆதிக்க சாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வழக்குப் போட்டுவிட்டு, அதை ஆதரித்த இராகுலை அடுத்தத் தலைமையமைச்சர் என அழைத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் ஒவ்வொரு கோயிலாகச் சென்று தன்னை பிராமணர் என கோத்திரத்தைச் சொல்லி அறிவித்து வரும் இராகுலுக்கு! பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்குப் போக மறுக்கும் இராகுலுக்கு!

இந்த நாடகத்தையெல்லாம் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் தம்பிதுரையோ நன்றாகப் பேசிவிட்டு, இச்சட்டம் நிறைவேற பா.ச.க.வுக்கு உதவி செய்வது போல் வெளிநடப்பு செய்துவிட்டார்.

இந்த ஆபத்துகளையெல்லாம் உணர்ந்து, நாம் தமிழர்களாய் ஒன்று சேர வேண்டும்! அவ்வாறு ஒன்று சேர்ந்து எதிர்த்துத்தான் இதை முறியடிக்க முடியும்!”

இவ்வாறு கி.வெங்கட்ராமன் பேசினார்.

Leave a Response