சோதிடரை அடுத்து விஜய்யின் வழக்குரைஞருக்கு அரசுப்பதவி – சர்ச்சை

சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​துக்​கான தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞ​ராக மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்​சிக்கு வந்​ததும்,மூத்தவழக்​கறிஞர் ஆர்​.சண்​முகசுந்​தரம் அரசு தலைமை
வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​பட்​டார்.அவர், 2024 ஆம் ஆண்டு ஜனவரி​யில்,தனிப்​பட்ட காரணங்​களுக்​காக தலைமை வழக்​கறிஞர் பதவி​யில் இருந்து வில​கி​னார்.

அதைத்​தொடர்ந்து மூத்தவழக்​கறிஞர் பி.எஸ்​.​இராமன்,தலைமை வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​பட்​டார்.கடந்த இரு ஆண்​டு​களாக,தமிழக அரசு சார்​பில் பல்​வேறு வழக்​கு​களில் அவர் ஆஜராகி வந்​தார்.

இந்தச்சூழலில்,2026 தேர்​தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது.இதையடுத்​து, பி.எஸ்​.​இராமன் தனது பதவியிலிருந்து விலகினார்.

இந்​நிலை​யில்,புதிய தலைமை வழக்​கறிஞ​ராக மூத்தவழக்​கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு
உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இவர், 2017 முதல் 2021 ஆம் ஆண்டுவரை அதி​முக ஆட்சிக்காலத்​தில் அரசு தலைமை வழக்​கறிஞ​ராகப்
பணி​யாற்​றிய​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இவர்,முன்​னாள் அட்​டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோ​பாலின் உறவினர் ஆவார்.விஜய் நா​ராயண் விரை​வில் புதிய தலைமை வழக்​கறிஞ​ராகப் பொறுப்​பேற்​க உள்​ளார்​.

இந்நிலையில் இந்த நியமனம் குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஏற்கெனவே,விஜய்யின் சோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்க்கு அரசு அதிகாரி பொறுப்பு கொடுத்தார்கள்.அது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.அதைத்தொடர்ந்து அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இப்போது விஜய் நாராயண் நியமனத்திலும் சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, விஜய்யின் தனிப்பட்ட வழக்குகளில் விஜய் நாராயண் அவரது வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார். குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு விஜய்யின் சொகுசு மகிழுந்து நுழைவுவரி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். அந்தவழக்கில் உயர்நீதிமன்றம் கடும் விமர்சனங்களை முன்வைத்து, விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தன்னுடைய தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்த ஒருவரை,மாநிலத்தின் மிக உயரிய அரசியலமைப்புப் பதவியில் அமர்த்துவது,’நலன் சார்ந்த மோதல்'(Conflict of Interest) மற்றும் ‘நிறுவனச் சுதந்திரம்’ (Institutional Independence) குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசுப் பதவிகளில் தன்னுடைய சோதிடர் அதையடுத்து தன்னுடைய வழக்குரைஞர் என் விஜய் நியமனம் செய்வது தார்மீக அடிப்படையில் தவறானது என்றும் பலர் விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Leave a Response