விஜய் கட்சிக்கு ஆதரவளித்தது ஏன்? -சி.வி.சண்முகம் விளக்கம்

நடிகர் விஜய் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் நேற்று சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது.அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 22 அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 உறுப்பினர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப்போட்டார்கள்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது சி.வி.சண்முகம் கூறியதாவது….

பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏக்களான நாங்கள் அரசுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அரசுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.அதிமுகவின் கொறடா என யாரும் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால்,அவரின் உத்தரவு செல்லாது.

அதிமுக எம்எல்ஏ.க்கள் 47 பேரிடமும் கையெழுத்துப் பெற்றேன் எனக் கூறும் இபிஎஸ்,எப்போது எங்கே கையெழுத்துப் போட்டார்கள் என்று கூற முடியுமா? தைரியம் இருந்தால் அதனை வெளியே காட்டமுடியுமா? தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதை மறைப்பதற்காக இவ்வாறு பேசுகிறார்.47 பேர் என்னை ஆதரிக்கிறார்கள் என சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு வழங்கியது போலியான கடிதம்.

புதுச்சேரி ரிசார்ட்டில் என்ன செய்தார் என்பதை இபிஎஸ் சொல்வாரா? புதுச்சேரி கூட்டத்தில் தான் முதல்வராகப் போவதாக தெரிவித்தார்.திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறினார்.ஆட்சியமைக்க டெல்லியில் பேசி,அனுமதி பெற்றுவிட்டதாகவும் சொன்னார்.நீங்கள் அனைவரும் அமைச்சராகலாம் என ஆசைவார்த்தை கூறினார்.சட்டமன்ற உறுப்பினர்களை இபிஎஸ் மிரட்டவும்,அச்சுறுத்தவும் பார்க்கிறார்.

தேர்தல் முடிவு அன்று வெற்றிச் சான்றிதழ் வாங்கிய உடன் 2 திமுக முன்னாள் அமைச்சர்கள் என்னுடைய லைனுக்கு வந்து என்னென்னமோ பேசினார்கள்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை.ஆனால்,மறுநாள் காலையில்தான் இபிஎஸ் ஆட்சியமைக்கப் போகிறோம்.திமுக ஆதரவு கொடுக்கும் என சொன்னார்.அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அந்த 2 முன்னாள் அமைச்சர்கள் யாரென்று கேட்காதீர்கள்.நான் சொல்லமாட்டேன்.

திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.அவர்களுடன் கூட்டணி வைக்க எப்படி தொண்டர்கள் ஒத்துக்கொள்வார்கள்.என் மனைவி கூட சோற்றில் விஷம் வைத்துவிடுவார் என நான் கூறினேன்.அதிமுக தோல்வியைச் சந்தித்திருக்கிறது.அதை ஏற்க மனமில்லாமல்,47 இடங்களில் வெற்றி பெற்றதை மிகப்பெரிய வெற்றி என்று கூறுகிறார்.இப்படிப்பட்டவரை பொதுச்செயலாளராக வைத்து என்ன செய்யமுடியும்?

ஜெயலலிதாவைப் போல தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் எனக் கூறும் தைரியம் அவருக்கு உள்ளதா? வெற்றி, தோல்வியை சரிசமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் அவருக்கு அந்த மனப்பக்குவம் கிடையாது.இதுவரை எந்தத் தோல்விக்கும் பொறுப்பேற்கவில்லை.இந்தத் தோல்வியில் அனைவருக்கும் பொறுப்புள்ளது.அவரை மட்டும் நான் குற்றம்சாட்டவில்லை.

தமிழகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது.அது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வர் ஆக்கலாம் என்ற யாரும் நினைத்துப் பார்க்காத,சிந்திக்காத ஒரு வாய்ப்பு.திருமாவளவனை முதல்வர் ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது.அவர் மட்டும் முதல்வர். மற்ற 33 அமைச்சர் பதவிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொன்னார்கள்.

ஆனால்,விசிக ஆட்சி என்றுதான் வரும் எனக்கூறி இபிஎஸ் அதை ஏற்க மறுத்தார்.நான்தான் முதல்வர் இல்லையென்றால்,நாம் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று சொல்லிவிட்டார்.

எங்களுடைய நோக்கமும் தவெகவின் நோக்கமும் திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான்.அதனால்தான் நாங்கள் இன்றைக்கு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.வேறு எந்த நோக்கமும் கிடையாது.

இதனால்தான் எங்களுக்கும் அவருக்கு கருத்து வேறுபாடு வந்தது.திமுகவின் எதிர்ப்பிலே வளர்ந்துள்ளோம்.எந்தச் சூழலிலும் அதிமுகதான் எங்கள் இயக்கம்.இன்றுவரை அவர்தான் எங்களது பொதுச்செயலாளர்.எங்களை துரோகிகள் எனச் சொல்கிறார்,அவர் திமுகவுடன் போகலாம் எனச் சொன்னதுக்கு என்ன அர்த்தம்

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறும்போது….

நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்யவேண்டும்.அதிமுகதான் எங்களின் உயிர்மூச்சு. கட்சியை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,ஓபிஎஸ்,வைத்திலிங்கம்,ஜே.சி.டி பிராபாகர் ஆகியோருக்காகவும் தான் பேசினோம்.இபிஎஸ் தான் இப்போதும் பொதுச்செயலாளர்.அதில் மாற்றுக் கருத்தில்லை.எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான்.
சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்.இப்போதும் கட்சியில் உள்ளவர்களை குறைசொல்லி வெளியே அனுப்பக்கூடாது.திமுகவை எதிர்த்துதான் இக்கட்சி தொடங்கியது. அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response