குடிகார குள்ளநரி என்று பதாகை – அதிமுக அலுவலக பரபரப்பு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.இதில்,அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற இடத்தைக்கூட அடையமுடியாமல் போனது.இக்கட்சியின் வாக்கு விழுக்காடும் குறைந்தது.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் தனது தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தனர்.இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகி தவெகவில் இணைந்தனர்.இதனால்,இந்த எண்ணிக்கை 43 ஆகக் குறைந்தது.

இந்நிலையில்,சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டார்.

முதல்கட்டமாக,ஜூன் 13 ஆம் தேதி,காஞ்சிபுரம்,உத்திரமேரூர்,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அந்தவகையில், நேற்று காலை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடம் கலந்தாலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.கே.பி.முனுசாமி,திண்டுக்கல் சீனிவாசன்,தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில்,நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள்,நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,முன்னாள் அமைச்சர்கள்,நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது,நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் இருக்கும் உட்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் தேர்தலில் சந்தித்த பிரச்சனைகள் ஆகியவை குறித்த புகார்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகத் தலைமைக்கு எடுத்துக்கூறியதாகக் கூறப்படுகிறது.மேலும்,நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்தும்;கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

அந்தக்கூட்டத்தில்,எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு,அவர்கள் போட்டியிடும் வகையில் செயல்படவேண்டும்.உள்ளாட்சிப் பிரதிநிதித்துவத்தை அதிமுக அதிகரிக்க வேண்டும் எனப் பல்வேறு விசயங்கள் குரித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது…

கட்சி நிர்வாகிகளிடம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும்,வெற்றி தோல்வி குறித்தும் சுதந்திரமாக யார் வேண்டுமானாலும் எந்தக்கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.அதன் அடிப்படையில் பெரும்பான்மையானவர்கள் கடந்தகால,நிகழ்காலக் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்தார்கள்.அதை உள்வாங்கிக் கொண்ட பொதுச்செயலாளர் நிர்வாகிகளின் கருத்திற்கு ஏற்ப இயக்கத்தை வழிநடத்துவோம் என்று உறுதியளித்து இருக்கிறார்.உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதற்கு முன்பு இடைத்தேர்தல் வரும்;எதற்கும் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, கட்சி அலுவலகத்தின் எதிரில் அதிமுக நிர்வாகிகள் பதாகை ஒன்றை வைத்துள்ளனர்.அதில்,எத்தனை ‘குடிகார குள்ளநரிகள் ஊளையிட்டாலும் சிங்கத்தமிழர் எடப்பாடியாரின் முன் ‘குள்ளநரிகள் ஊளை’ எடுபடாது.தொண்டர்கள் என்றென்றும் கழகப் பொதுச்செயலாளர் வழியில் என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

மேலும்,அதில்,அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ளநரி என்ற வாசகத்துடன் பின்னணியில் சிலர் நிற்க குள்ளநரி ஒன்று பேட்டி கொடுப்பது போலவும்;அடுத்து,‘இன்று அனாதையாக வந்து ஓலமிடும் குடிகார குள்ளநரி’ என்ற வாசகத்துடன் குள்ளநரி தனியாக இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துப் பேட்டி கொடுக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் குறிப்பிடும் வகையிலேயே இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளது என்று அதிமுக தொண்டர்களே கூறிச்சென்றனர்.

அதோடு,பிரிந்து செல்ல நினைப்பவர்களை அரவணைத்து மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த எண்ணவேண்டும்,இதுபோல் அவர்களைச் சீண்டிப்பார்த்து ஒட்டுமொத்தமாக எதிரியாக்க நினைப்பது சரியில்லை என்று மூத்த அதிமுகவினர் சொல்கிறார்கள்.

Leave a Response