இலஞ்சம் வாங்காமல் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி – உண்மை என்ன?

தவெக ஆட்சி அமைந்ததும் கையூட்டு வாங்காமல் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஒரு செய்தி பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

திமுக ஆட்சியில் கடந்த 2006-11 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு-அரசு உதவிபெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும்,தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்து வந்தது.அதன்பிறகு மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்துப் பள்ளிகளும் சமச்சீர் கல்வி முறையையே பின்பற்றவேண்டும் என்ற அறிவிப்பு வந்தபிறகு தங்கள் பள்ளிகளுக்கு தனித்த அடையாளம் வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கிச் சென்றது.

அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்கப்பார்த்து அந்த முயற்சியும் தோல்வி அடைந்தையடுத்து அரசின் உதவியுடன் பல்வேறு பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறின. அதன்படி அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்தது.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது ஏறக்குறைய 1800 சிபிஎஸ்இ பள்ளிகளும்,13000 தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் இருந்தன.

2006-11 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.

மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற தடையில்லாச்சான்று கொடுப்பதை நிறுத்தி வைத்தது. சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் தேசியக் கல்விக்கொள்கையின்படி செயல்படும்.தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை,இந்தி,சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் திமுக அரசு என்ஓசி வழங்காமல் இதுவரை அதை நிறுத்தி வைத்தாக கூறப்படுகிறது.

உடனே,தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கத் தேவையான என்ஓசி கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது.அவர்கள் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க என்ஓசி இல்லாமலும் விண்ணப்பம் செய்யலாம்.அவர்கள் நேரடியாக மாநிலஅரசுக்குக் கடிதம் எழுதி 30 நாட்களில் அனுமதி வழங்கவேண்டும்.தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும்.அதிலும் மாநிலஅரசு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை ஒன்றிய அரசு மாற்றியது.

தற்போது அமைந்துள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு மறைமுகக் கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் இருக்கும் வகையில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற என்ஓசி கொடுத்துள்ளது.

இதன்மூலம்,கல்விக்கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநிலஅரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றியஅரசு வசம் சென்றுவிடும்.இதை மறைக்கத்தான் இலஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

எனவே,இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் தமிழகத்தில் ஏறக்குறைய 13,000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரேநாளில் 1000 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர்உரையில் தவெக அரசு கூறியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் புதிய தேசியக் கல்விக்கொள்கைபடி செயல்படக்கூடியவை,அந்தப்பள்ளிகளில் இந்தி,சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கட்டாயம் ஆகும்.எனவே அதிகமான தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுத்து அதன்மூலம் மறைமுகமாக இருமொழிக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்யவே இந்த 1000 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அனுமதி என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விஜய் அரசு அமைந்த பிறகு பாஜகவின் கொள்கைகள் படிப்படியாக தமிழ்நாட்டில் சட்டமாக்கப்படுகின்றன என்றும் அதன்படியே தமிழ்நாட்டுப்பள்ளிகளில் அதிகாரப்பூர்வ இந்தித்திணிப்பு நடந்திருக்கிறது என்றும் இதை மறைக்கவே இலஞ்சம் வாங்காமல் அனுமதி கொடுத்ததாகப் பொய் பேசுகின்றனர் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response